

உயர் நீதிமன்ற மதுரை கிளையில் சிஐஎஸ்எப் பாதுகாப்பு அளிப்பது தொடர்பாக மத்திய பாதுகாப்பு படை கமாண்டர்கள் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் நுழைந்து தமிழை வழக்காடு மொழியாக கொண்டுவர வேண்டும் என்பதை வலியுறுத்தி கோஷம் எழுப்பியது, நீதிமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டம், பதாகைகள் வைத்தது உள்ளிட்ட தொடர் சம்பவங்கள் எதிரொலியாக உயர் நீதிமன்ற பாதுகாப்பை மேம்படுத்துவது தொடர்பான வழக்கு ஒன்றை உயர் நீதிமன்ற முதல் அமர்வு தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தது.
இந்த வழக்கை விசாரித்த முதல் அமர்வு, சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற மதுரை கிளைக்கு நவ. 16 முதல் சிஐஎஸ்எப் பாதுகாப்பு அளிக்க உத்தரவிட்டது. இதையடுத்து உயர் நீதி மன்றம், மதுரை கிளைக்கு 6 மாதங்கள் சிஐஎஸ்எப் வீரர்கள் பாதுகாப்பு அளிப்பதற்கான ரூ.16.6 கோடி பணத்தை மத்திய அரசிடம் தமிழக அரசு செலுத்தியது.
இதைத் தொடர்ந்து உயர் நீதி மன்ற பாதுகாப்பை மத்திய பாது காப்பு படையிடம் ஒப்படைப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் சென்னையில் உயர் நீதிமன்ற பாதுகாப்பு குழுத் தலைவர் நீதிபதி ஆர்.சுதாகர் தலைமையில் கடந்த 7-ம் தேதி நடைபெற்றது.
இந்நிலையில் கமாண்டர் மணிசிங் தலைமையில் மத்திய பாதுகாப்பு படையினர் நேற்று திடீரென மதுரையில் உள்ள உயர் நீதிமன்ற கிளைக்கு வருகை தந்தனர்.
அவர்கள் உயர் நீதிமன்ற கிளை வளாகத்தை முழுமையாக ஆய்வு செய்தனர். உயர் நீதிமன்ற கட்டிடங்களுக்கு செல்லும் வாயில் களை பார்வையிட்டனர்.
தற்போது உயர் நீதிமன்ற கிளையில் பாதுகாப்பு பணியை மேற்கொண்டுவரும் போலீ ஸாருடனும் அவர்கள் ஆலோ சனை நடத்தினர். சென்னை உயர் நீதிமன்றம், உயர் நீதிமன்ற மதுரை கிளைக்கு எவ்வாறு மத்திய பாதுகாப்பு படை பாதுகாப்பு அளிக்கப்படும் என்பது தொடர்பாக நவ. 14-ல் முறைப்படி அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளது.