Published : 01 Apr 2021 06:09 PM
Last Updated : 01 Apr 2021 06:09 PM

மகனுக்குப் பதவி தரவேண்டும் என்பதற்காக ஸ்டாலின் 70 வயது வரை இளைஞரணிச் செயலாளராக இருந்தார்: முதல்வர் பழனிசாமி விமர்சனம் 

''கருணாநிதி, ஸ்டாலின், கனிமொழி, உதயநிதி எனக் கட்சியிலும் சரி, ஆட்சி அதிகாரத்திலும் சரி குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே அனுபவிக்கின்றனர். தனது குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு இளைஞரணிச் செயலாளர் பதவி வழங்க வேண்டும் என்பதற்காக, 70 வயது வரை ஸ்டாலின் இளைஞரணிச் செயலாளராக இருந்தார். இப்போது அதைத் தனது மகனுக்குக் கொடுத்துவிட்டுத் தலைவராகிவிட்டார்'' என முதல்வர் பழனிசாமி விமர்சித்துள்ளார்.

குன்னூரில் அதிமுக, கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் பழனிசாமி பிரச்சாரத்தில் பேசியதாவது:

“நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் எப்படிப்பட்டவர் என்பது உங்களுக்குத் தெரியும். அவர் பெண்களை இழிவுபடுத்திப் பேசுகின்றவர். ஆகவே, திமுகவைச் சேர்ந்தவர்களைப் பொறுத்தவரை, பெண்களை மதிக்கத் தெரியாத மனிதர்கள். அடுத்தவர்களைக் களங்கப்படுத்தி, அவதூறு பேசி, மனதைப் புண்படுத்தி, அதில் மகிழ்ச்சி காணும் கட்சி திமுக. ஆனால், அடுத்தவர்களை மதித்து, மகிழ்வித்து அவர்கள் சிரிக்கின்ற சிரிப்பில் மகிழ்ச்சி காண்கின்ற கட்சி அதிமுக.

ஆகவே, பெண்களுக்குப் பாதுகாப்பு வழங்குவது மிகவும் முக்கியம். திமுக வந்தால் பெண்களுக்குப் பாதுகாப்பு கிடைக்காது. தரக்குறைவாக பேசுகின்ற திமுக கட்சிக்கு இந்தத் தேர்தலில் சரியான பாடம் கற்பிக்க வேண்டும். தாய்க்குலத்தை அவமதித்தவர்கள், தாய்குலத்தைப் பழி சொன்னவர்களுக்குத் தக்க பாடத்தை இந்தத் தேர்தல் மூலமாகப் புகட்டுங்கள்.

கருணாநிதி, ஸ்டாலின், கனிமொழி, உதயநிதி எனக் கட்சியிலும் சரி, ஆட்சி அதிகாரத்திலும் சரி குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே அனுமவிக்கின்றனர். தனது குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு இளைஞரணிச் செயலாளர் பதவி வழங்க வேண்டும் என்பதற்காக, 70 வயது வரை ஸ்டாலின் இளைஞரணிச் செயலாளராக இருந்தார். இப்போது அதைத் தனது மகனுக்கு கொடுத்துவிட்டுத் தலைவராகி விட்டார். கனிமொழி மகளிரணிச் செயலாளர். ஆனால், அதிமுகவில் அப்படி அல்ல. சாதாரணத் தொண்டன் கூட உயர்ந்த பதவிக்கு வர முடியும்”.

இவ்வாறு முதல்வர் பழனிசாமி பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x