

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் ரவிச்சந்திரனை பரோலில் விடுதலை செய்யக்கோரிய மனுவை சிறைத்துறை நிராகரித்துளளது.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவர் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி மதுரை மத்திய சிறையில் 28 ஆண்டுகளாக ஆயுள் தண்டனை அனுபவித்து வருகிறார்.
ரவிச்சந்திரனை 30 நாள் பரோலில் விடுதலை செய்யக்கோரி அவரது தாயார் ராஜேஸ்வரி சிறைத்துறையிடம் மனு அளித்தார். இந்த மனுவை நிராகரித்து சிறைத்துறை உத்தரவிட்டுள்து.
அதில், ரவிச்சந்திரனுக்கு ஒரு மாதம் பரோல் விடுமுறை கேட்டு அவர் தாயார் அளித்த மனுவில், தனது வேளாண் நிலத்தை பராமரிக்கவும், தனக்கு வலது கண்ணில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளவும் ரவிச்சந்திரனை 30 நாட்கள் சாதாரண பரோல் விடுமுறை வழங்க வேண்டும் எனக் கூறியிருந்தார்.
உயர் நீதிமன்றக் கிளையிலும் மனு தாக்கல் செய்தார். உயர் நீதிமன்றம் அவரது மனுவை பரிசீலிக்க உத்தரவிட்டது. இதையடுத்து ரவிச்சந்திரனுக்கு பரோல் விடுப்பு வழங்குவது குறித்து தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் கோவில்பட்டி நன்னடத்தை அலுவலரிடம் அறிக்கை பெறப்பட்டது. அவர்கள் அளித்த அறிக்கையில் பரோல் வழங்குமாறு பரிந்துரை செய்யவில்லை.
தமிழகத்தில் ஏப். 6-ல் சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெறுவதால் ரவிச்சந்திரனுக்கு வழிக்காவல் வழங்க முடியாத நிலை உள்ளது. ரவிச்சந்திரன் வீடு பாதுகாப்பு இல்லாமலும், அருகாமையில் இலங்கை அகதிகள் முகாம் இருப்பதாலும் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதனால் பரோல் விடுமுறை வழங்க காவல் கண்காணிப்பாளர் கடும் ஆட்சேபம் தெரிவித்துள்ளார்.
மேலும் ராஜேஸ்வரி விவசாய நிலம் பராமரிப்பு, கண் அறுவை சிகிச்சை தொடர்பான ஆவணங்களை பரோல் விண்ணப்பத்துடன் தாக்கல் செய்யவில்லை. எனவே பரோல் வழங்க முடியாது.
இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.