Published : 01 Apr 2021 04:40 PM
Last Updated : 01 Apr 2021 04:40 PM

ஓவர் நைட்டில் எடுத்த முடிவில் மாற்றம்; நிதியமைச்சரே தேர்தல் பயம் தொடரட்டும்: சு.வெங்கடேசன் விமர்சனம்

நேற்றிரவு சிறுசேமிப்பு வட்டிக் குறைப்பு, தொழிலாளர் வைப்பு நிதி வட்டிக்குறைப்பு என அறிவித்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் திடீரென காலையில் வாபஸ் பெற்றார். இதுகுறித்து விமர்சித்துள்ள மார்க்சிஸ்ட் எம்.பி., சு.வெங்கடேசன் நிதியமைச்சருக்கு தேர்தல் பயம் தொடரட்டும் என்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி., சு.வெங்கடேசன் இன்று வெளியிட்ட அறிக்கை:

“நேற்று அறிவித்த சிறு சேமிப்புகளுக்கான வட்டிக் குறைப்பு ஒரே இரவில் திரும்பப் பெறப்பட்டுள்ளது. "கவனமில்லாமல்" (Over sight) நடந்துவிட்டது என்று விளக்கம் தந்துள்ள நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களே, "கவனமில்லாமல்" கடந்த 7 ஆண்டு ஆட்சியில் இப்படி சாதாரண மக்களை நிறையக் காயப்படுத்தியுள்ளீர்கள்.

"கவனத்தோடு" கார்ப்பரேட்டுகளுக்கு கவரி வீசியும் வந்திருக்கிறீர்கள். "கவனமில்லாமல்" பெட்ரோல், டீசல், கேஸ் விலையை உயர்த்தினீர்கள். ஒரு லட்சம் கோடி வரை ஓராண்டில் மக்களிடம் இருந்து பறித்தீர்கள். "கவனத்தோடு" கார்ப்பரேட் வரிகளைக் குறைத்து பல லட்சம் கோடியை உங்கள் கண்மணிகள் அம்பானி, அதானி வகையறாக்களுக்குத் தந்தீர்கள். 2020 கோவிட் ஆண்டில் அம்பானியின் செல்வம் ரூ.1,40,000 கோடி உயர்ந்தது என்பது உங்கள் "கவனிப்பு" இல்லாமலா?

ஆனால், தேர்தல் காலம் மக்கள் உன்னிப்பாக உங்களைக் "கவனிக்கிற" காலம். மக்கள் சிறுக சிறுகச் சேமிக்கும் வைப்புத் தொகை மீதான வட்டியைக் குறைத்துவிட்டீர்கள். மூத்த குடிமக்கள், விவசாயிகள், பொதுவைப்பு நிதி, அஞ்சலக சேமிப்புப் பத்திரங்கள், பெண் குழந்தைகள்... இவர்களுக்கான சேமிப்புகளுக்கான வட்டி விகிதங்களை எல்லாம் ஒரே ஆணையின் கீழ் 31.03.2021 அன்று குறைத்தீர்கள்.

சிறுசேமிப்புகள் என்றால் அவை கத்தை கத்தையாக விரியும் பணத்தாள்கள் அல்ல நிதியமைச்சரே. அது எங்கள் உழைப்பாளி மக்களின், நடுத்தர மக்களின் வியர்வை. ரத்தம். அதனால்தான் நேற்று அறிவிக்கப்பட்ட கணத்தில் இருந்து சாமானிய மக்கள் வயிறு எரிய உங்கள் மத்திய அரசை, உங்கள் கால்களில் விழுந்து கிடக்கும் தமிழக ஆளும் கட்சியை வீதியெங்கும் திட்டித் தீர்த்து விட்டார்கள்.

"கவனமில்லாமல்" நடந்துவிட்டது என்று கூறி வட்டிக் குறைப்பை திரும்பப் பெற்றுள்ளீர்கள். "கவனமில்லாமல்" என்பது உண்மைதான். உங்களுக்கு என்றைக்குச் சாமானிய மக்கள் மீது கவனம் இருந்திருக்கிறது அமைச்சரே?

தேர்தல் பயம், உங்களின் ஆணையை மை உலர்வதற்கு முன்பு திரும்பப் பெற வைத்துள்ளது. தேர்தல் முடிந்துவிட்டால் வாக்காளர் விரல் மை உலருவதற்குள் மீண்டும் வட்டியைக் குறைக்க மாட்டீர்கள் என்பது என்ன நிச்சயம்.

வாக்காளர்கள் கவனித்துக் கொள்வார்கள். அவர்கள் கொடுக்கப்போகும் தீர்ப்பின் மூலம் இந்த பயம் தொடர்வதை உறுதிப்படுத்துவார்கள்”.

இவ்வாறு சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x