திமுக- காங்கிரஸ் தலைவர்கள் தங்கள் பிள்ளைகளைப் பற்றித்தான் கவலைப்படுகின்றனர்: அமித் ஷா விமர்சனம்

தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களை மத்திய அமைச்சர் அமித் ஷா அறிமுகம் செய்துவைத்தார்.
தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களை மத்திய அமைச்சர் அமித் ஷா அறிமுகம் செய்துவைத்தார்.
Updated on
1 min read

சோனியாவுக்கு ராகுலைப் பற்றிக் கவலை. ஸ்டாலினுக்கு உதயநிதி பற்றிக் கவலை. அவர்கள் தங்கள் பிள்ளைகளைப் பற்றித்தான் கவலைப்படுகின்றனர் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா விமர்சித்துள்ளார்.

திருக்கோவிலூரில் இன்று பாஜக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது அவர் பேசியதாவது:

''திமுக, காங்கிரஸைப் பற்றி எல்லோருக்கும் நன்றாகத் தெரியும். லஞ்சம், ரவுடியிசம், ஊழல், நில அபகரிப்பு, குடும்ப வளர்ச்சி ஆகியவற்றை மட்டுமே இரு கட்சிகளும் செய்கின்றன. திமுகவைச் சேர்ந்த ஆ.ராசா, முதல்வரின் தாயார் பற்றி மிகவும் தரக்குறைவாகப் பேசிய காணொலியைப் பார்த்தேன். எப்படியாவது தேர்தலில் ஜெயிக்கத் தரக்குறைவான வார்த்தைகளைப் பயன்படுத்துகின்றனர். ஜெயலலிதா பற்றியும் இதுபோல தவறான கருத்துகளைத் தெரிவித்துள்ளனர். பெண்களை, தாய்மார்களை இழிவாகப் பேசும் திமுக கூட்டணிக்குச் சரியான பாடம் கற்பிக்க வேண்டும்.

இத்தேர்தல் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கும், காங்கிரஸ் - திமுக ஊழல் கூட்டணிக்கும் இடையில் நடைபெறும் தேர்தலாகும். மக்கள் திலகமாகத் திகழ்ந்தவர் எம்ஜிஆர். ஏழை மக்களுக்காகப் பணியாற்றிய பெருமை எம்ஜிஆரைச் சேரும். அதன்பின் எம்ஜிஆர் வழியில் ஜெயலலிதா தமிழகத்தை வளர்ச்சிப் பாதைக்குக் கொண்டு சென்றார். சிறந்த நிர்வாகம் செய்யும் பெண்மணியாக ஜெயலலிதா திகழ்ந்தார். தற்போது பிரதமர் மோடியின் வழிகாட்டுதலில் தமிழக முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தமிழகத்தைச் சிறப்பான வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்கின்றனர்.

ஸ்டாலின் தமிழகத்தில் ஊழல் பற்றிப் பேசுகிறார். அவர் 2 ஜி, சன்டிவி ஊழல் குறித்துத் திரும்பிப் பார்க்க வேண்டும். திமுக அரசியல் கட்சி அல்ல, அது வியாபார நிறுவனம். திமுகவுக்கும், காங்கிரஸுக்கும் தமிழக மக்களைப் பற்றிக் கவலையில்லை. சோனியாவுக்கு ராகுலைப் பற்றிக் கவலை. ஸ்டாலினுக்கு உதயநிதி பற்றிக் கவலை. அவர்கள் தங்கள் பிள்ளைகளைப் பற்றித்தான் கவலைப்படுகின்றனர்.

ஆனால், பிரதமர் மோடிக்குத் தமிழ் மீதும், தமிழக மக்கள் மீதும் அன்பும், பாசமும் உள்ளது. உலகில் எங்கு சென்றாலும் திருக்குறளை மேற்கோள் காட்டி மோடி பேசி வருகிறார். தமிழ் மக்கள் மீது அக்கறை கொண்டவர்களில் பிரதமர் மோடியைத் தவிர வேறு யாரையும் ஒப்பிட முடியாது. இலங்கைத் தமிழர்களுக்கு வீடு கட்டித் தந்தவர் மோடி. அவர்களின் வீட்டுக்கே சென்று உணவருந்தியுள்ளார். யாழ்ப்பாணத்தில் சிதிலமடைந்த கட்டிடம், கோயில்களைப் புனரமைப்பு செய்துள்ளார்.

ஜல்லிக்கட்டு பற்றி காங்கிரஸ், திமுகவினர் பேசுகின்றனர். ஜல்லிக்கட்டைத் தடை செய்யக் கையெழுத்திட்டவர் ராகுல். முருகன் அருளால் அவர்கள் ஆட்சிக்கு வரவில்லை. வந்திருந்தால் அவர்கள் ஜல்லிக்கட்டை எப்போதோ தடை செய்திருப்பார்கள்''.

இவ்வாறு அமித் ஷா பேசினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in