அதிமுக தேர்தல் பிரச்சாரம்: அம்மா இருசக்கர வாகனப் பயனாளிகள் வாக்குச் சேகரிப்பு

அதிமுக தேர்தல் பிரச்சாரம்: அம்மா இருசக்கர வாகனப் பயனாளிகள் வாக்குச் சேகரிப்பு
Updated on
1 min read

அதிமுக தேர்தல் பிரச்சாரத்தில் அம்மா இருசக்கர வாகனப் பயனாளிகள் பேரணியாகச் சென்று அதிமுக வேட்பாளர்களுக்காக வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழகத்தில் வசித்துவரும், வாக்காளர் அடையாள அட்டை வைத்திருக்கும் 45 வயதுக்குட்பட்ட பணிக்குச் செல்லும் பெண்கள் பயன்பெறும் வகையில், 50 சதவிகித மானியத்துடன் அம்மா இருசக்கர வாகனத் திட்டம் 2016-ம் ஆண்டு அதிமுக தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து அந்தத் திட்டம் 2019 ஜனவரி மாதம் நடைமுறைப்படுத்தப்பட்டது. மகளிர் திட்டம் மூலம் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு, ஒன்றியம் வாரியாக விண்ணப்பித்தவர்களுக்குத் தகுதியின் அடிப்படையில் வழங்கப்பட்டது.

தற்போது தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தாங்கள் போட்டியிடும் தொகுதியில் அம்மா இருசக்கர வாகனப் பயனாளிகளை அடையாளம் கண்டு, அரசின் நலத்திட்ட உதவி வழங்கி ஆட்சி தொடர ஆதரவு அளிக்க வேண்டும் எனக் கேட்டு வாக்குச் சேகரித்து வருகின்றனர்.

அந்த வகையில் கடலூர் மாவட்டம், புவனகிரி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் அருண்மொழித்தேவன் நேற்று புவனகிரி தொகுதிக்குட்பட்ட சேப்ளாநத்தம் பகுதியில் வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டபோது, இளம்பெண்கள் மொபட்டில் கொடியுடன், இரட்டை இலை சின்னத்தை வாகனத்தில் பொருத்திக் கொண்டு பேரணியாக வேட்பாளர் வாகனம் முன் சென்றனர்.

அப்போது அங்கிருந்த புவனிகிரி தொகுதி அதிமுக தேர்தல் பொறுப்பாளரும், கம்மாபுரம் ஊராட்சி ஒன்றியத் துணைத் தலைவருமான கனகசிகாமணியிடம் கேட்டபோது, "இந்த அரசின் சிறப்புத் திட்டங்களில் இதுவும் ஒன்று. பல பெண்களுக்கு இத்திட்டம் பயனுள்ளதாக அமைந்ததால், பயனாளிகள் அவர்களாகவே முன்வந்து வாக்குச் சேகரிக்கின்றனர். இது எங்களுக்கு உத்வேகத்தை அளித்துள்ளது. அரசின் பயன்கள் எந்த இடைத்தரகரும் இல்லாமல் பெண்களை நேரடியாகச் சென்றிருப்பதற்கு இது உதாரணம்" என்றார்.

அதிமுகவினர் வாக்குச் சேகரிப்பில் பயனாளிகளையும் விட்டு வைக்கவில்லை என்ற விமர்சனக் குரல்கள் எழுந்துள்ளதை அவர்கள் பொருட்படுத்தியதாகத் தெரியவில்லை.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in