திருச்சி அருகே ரூ.1 கோடி பறிமுதல்; அதிமுகவினர் கொண்டு சென்ற கோடிக்கணக்கான ரூபாய் கொள்ளை? - 6 பேரைப் பிடித்து விசாரணை

பிரதிநிதித்துவப் படம்
பிரதிநிதித்துவப் படம்
Updated on
2 min read

திருச்சி மாவட்டம் பெட்டவாய்த்தலை பகுதியில் கடந்த 23-ம் தேதி 2 கார்களில் வந்தவர்கள் சாலையோரம் நின்று வாக்குவாதத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த தேர்தல் அலுவலர் ராஜசேகரன் தலைமையிலான பறக்கும் படையினரைப் பார்த்ததும், ஒரு காரில் இருந்தவர்கள் தப்பிச் சென்று விட்டனர். மற்றொரு காரில் வந்த 4 பேரைப் பிடித்து விசாரித்தனர்.

அப்போது, கார் அருகில் சாலையோரம் கிடந்த ஒரு சாக்கு மூட்டையைக் கைப்பற்றிப் பிரித்துப் பார்த்தபோது, அதில் 500 ரூபாய் நோட்டுகளாக ரூ.1 கோடி இருந்தது. இதையடுத்து, பண மூட்டையைக் கைப்பற்றிய பறக்கும் படையினர், ஸ்ரீரங்கம் தாலுகா அலுவலகத்துக்கு கொண்டு சென்றனர். மேலும், காரில் வந்த 4 பேரையும் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

அதில், அவர்கள் முசிறியைச் சேர்ந்த அதிமுக பிரமுகர்களான ரவிச்சந்திரன் (55), 11-வது கிளைச் செயலாளர் சத்தியராஜா (43), எம்ஜிஆர் இளைஞரணிச் செயலாளர் ஜெயசீலன் (46), டிரைவர் சிவகுமார் (36) ஆகியோர் என்பதும், பிடிபட்ட கார் முசிறி தொகுதியின் எம்எல்ஏவும், தற்போதைய அதிமுக வேட்பாளருமான செல்வராசு மகன் ராமமூர்த்திக்குச் சொந்தமானது என்பதும் தெரியவந்தது.

இந்தப் பணத்துக்கும் தங்களுக்கும் தொடர்பில்லை என 4 பேரும் கூறியதால், அவர்கள் அனைவரும் அங்கிருந்து அனுப்பி வைக்கப்பட்டனர். பணம் குறித்து வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அதைத் தொடர்ந்து, உரிமை கோராத பணம் தொடர்பாக பெட்டவாய்த்தலை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த விவகாரத்தில் முறையாக விசாரணை நடத்தவில்லை, தேர்தல் ஆணையத்துக்கு உரிய நேரத்தில் தகவல் அளிக்கவில்லை என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் அப்போதைய ஆட்சியர் சு.சிவராசு, மாவட்ட எஸ்.பி ராஜன், சப் கலெக்டர் நிஷாந்த் கிருஷ்ணா உள்ளிட்டோரை இடமாற்றம் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. புதிய ஆட்சியராக திவ்யதர்ஷினி, எஸ்.பி.யாக மயில்வாகனன் நியமிக்கப்பட்டனர்.

அதன்பின், எஸ்.பி.மயில்வாகனன் மேற்பார்வையிலான தனிப்படை போலீஸார் இது குறித்து விசாரணை மேற்கொண்டனர். அதில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் பெட்டவாய்த்தலை அருகே சாலையோரம் கேட்பாரற்றுப் பணம் கிடந்ததாகப் பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கு, தற்போது கொள்ளை வழக்காக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக, ஸ்ரீரங்கம் பகுதியைச் சேர்ந்த 6 பேரைப் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில், அதிமுக நிர்வாகி ஒருவருக்கும், பிரபல ரவுடி ஒருவருக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து போலீஸார் கூறும்போது, "பறக்கும் படையினரால் ரூ.1 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்ட இடத்தில், அங்கிருந்து மேலும் கோடிக்கணக்கான ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக, 6 பேரிடம் விசாரித்து வருகிறோம்.

கேட்பாரற்றுக் கிடந்ததாக கூறப்பட்ட பணத்தைக் கொண்டு வந்தது அதிமுகவினர் எனவும், அவர்கள் காரில் பணம் கொண்டு செல்லும் தகவலறிந்த ரவுடி கும்பல், அதிமுகவினரை வழிமறித்துக் கொள்ளையில் ஈடுபட்டதாகவும், அப்போது அவர்கள் பறித்துச் சென்றது போக, மீதம் விட்டுச் சென்ற ரூ.1 கோடி பணத்தைத்தான் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தததாகவும் தெரியவருகிறது. மிக முக்கியமான வழக்கு என்பதால் விசாரணை முடியும்முன், இது தொடர்பான விவரங்களைத் தெரிவிக்க முடியாது" என போலீஸார் மறுத்துவிட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in