Published : 01 Apr 2021 12:26 PM
Last Updated : 01 Apr 2021 12:26 PM

திமுகவின் தேர்தல் அறிக்கை கள்ள நோட்டு; அதிமுகவின் தேர்தல் அறிக்கை நல்ல நோட்டு: ஓபிஎஸ் பேச்சு

பெண்களுக்கான சமூகப் பாதுகாப்பு மட்டுமில்லாது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்காகவும் அதிமுக அரசு பாடுபட்டுக் கொண்டிருப்பதாகத் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மதுரையில் பேசியுள்ளார்.

அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் இன்று மதுரை மாவட்டத்தில் அதிமுக கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்துப் பேசினார். உசிலம்பட்டி, திருமங்கலம், சோழவந்தான், மதுரை கிழக்கு மற்றும் திருப்பரங்குன்றம் தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து செல்லம்பட்டி பேருந்து நிலையம், அய்யர் பங்களா, அவனியாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் ஓபிஎஸ் பிரச்சாரம் செய்தார்.

அப்போது அவர் பேசியதாவது;

''அதிமுக அரசு தொலைநோக்குப் பார்வையுடன் நல்ல பல திட்டங்களைத் தந்துள்ளது. அதனால், 50 ஆண்டுகளுக்குப் பிறகு வரும் நமது எதிர்காலச் சந்ததியினரும் இந்தத் திட்டங்களால் பலனடைவார்கள்.

திமுக 2006-ம் ஆண்டில் ஒரு தேர்தல் அறிக்கை வெளியிட்டு ஆட்சியைப் பிடித்தது. அதில், 2 ஏக்கர் நிலம் தருவார்கள் என்று சொல்லியிருந்தார்கள். ஆனால், தற்போது வரை தரவில்லை. இதை நாங்கள் சட்டப்பேரவையில் எதிர் வரிசையில் அமர்ந்திருந்த கருணாநிதியிடம் கேட்டோம். அவர் உடனே கோபப்பட்டு எழுந்து சென்றுவிட்டார்.

இப்போதும் ஒரு பொய்யான தேர்தல் அறிக்கையை வெளியிட்டு இருக்கிறார்கள். திமுகவின் இந்தத் தேர்தல் அறிக்கை கள்ள நோட்டு. அது ஒரு போதும் செல்லாது. ஆனால், அதிமுக தேர்தல் அறிக்கை நல்ல நோட்டு. அது எப்போதும் செல்லும்.

பெண்கள் நாட்டின் கண்கள். பெண்களுக்கான ஏராளமான சமூகப் பாதுகாப்புத் திட்டங்களை அதிமுக நடைமுறைப்படுத்தியுள்ளது. பெண்கள் முன்னேற்றத்திற்காகச் சொன்னதை முழுமையாகச் செய்தோம். தற்போது சொல்லாததையும் செய்கிறோம். பெரியார் கண்ட கனவான ஆணுக்குப் பெண் சமம் என்ற நிலையை ஜெயலலிதா நிறைவேற்றினார். தற்போது அதை நாங்கள் கடைப்பிடிக்கிறோம். ஆனால், திமுக பெண்களை இழிவுபடுத்திக் கொண்டிருக்கிறது. பெண்களுக்கான சமூகப் பாதுகாப்பு மட்டுமில்லாது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்காகவும் அதிமுக அரசு பாடுபட்டுக் கொண்டிருக்கிறது.

மக்களுக்கு எது தேவை, எந்தத் திட்டம் தந்தால் மக்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும் என்று அறிந்து அதைத் தருகிற அரசாக அதிமுக அரசு செயல்படுகிறது. ஏழை, எளிய மாணவர்களுக்கு 14 வகை கல்வி உபகரணங்களை வழங்கி அவர்களைப் பட்டம் பெற வைத்துள்ளோம். மூன்றில் ஒரு பங்கு நிதியைக் கல்விக்கு ஒதுக்கிய ஒரே அரசு அதிமுக அரசுதான். அதனால், தற்போது இந்தியாவிலே தமிழகத்தில்தான் உயர் கல்விக்குச் செல்கிற மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது''.

இவ்வாறு துணை முதல்வர் ஓபிஎஸ் பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x