

சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும் ஏப்.6-ம் தேதிதொழிலாளர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும் என்று நிறுவனங்களுக்கு தொழிலாளர் ஆணையர் மா.வள்ளலார் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டசெய்திக்குறிப்பு:
தமிழக சட்டப் பேரவைத் தேர்தல், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி இடைத்தேர்தல் ஆகியவற்றின் வாக்குப்பதிவு ஏப்.6-ம்தேதி நடைபெற உள்ளது. தேர்தல்ஆணையம் வெளியிட்ட அறிவுரைகளின்படி, தமிழகத்தில் உள்ள தொழில் நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், மற்றும் அனைத்து கடைகள், வர்த்தகநிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், தொழிற்சாலைகள், தோட்ட நிறுவனங்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள், பீடி, சுருட்டு உற்பத்தி நிறுவனங்கள், அனைத்து பொதுத்துறை நிறுவனங்கள் ஆகியவற்றில் பணிபுரியும் தினக்கூலி,தற்காலிக, ஒப்பந்த தொழிலாளர்களுக்கு ஏப்.6-ம் தேதி, அவர்கள்வாக்களிக்க ஏதுவாக ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்கப்பட வேண்டும் என அனைத்து வேலைஅளிப்பவர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
கட்டுமானத் தொழில் உள்ளிட்டஅனைத்து அமைப்புசாரா தொழிலாளர்களுக்கும் விடுமுறை விடப்படுவதோடு ஒரு நாளுக்கு அளிக்கப்பட்டு வரும் ஊதியமாகவும், அரசால் நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச ஊதியத்துக்கு குறையாமலும் வழங்கப்பட வேண்டும்.
விடுமுறை அளிக்கத் தவறும் நிறுவனங்கள் மீதான புகார்களை 044- 24335107 என்ற தொலைபேசி எண்ணுக்கும், தொழிலாளர் இணை ஆணையர் பா.மாதவன் (9487269270), துணை ஆணையர் டி.விமலநாதன் (9442540984), உதவி ஆணையர்கள் ஓ.ஜானகிராமன் (8610308192), எம்.மணிமேகலை (9444647125), எஸ்.பி.சாந்தி (7305280011) ஆகியோருக்கும் தெரிவிக்கலாம்.