அரசியல்வாதிகள் பதுக்கி வைத்திருக்கும் கறுப்பு பண தகவலை கட்சியினரே தெரிவிப்பார்கள்: வருமானவரித் துறை முன்னாள் அதிகாரி தகவல்

அரசியல்வாதிகள் பதுக்கி வைத்திருக்கும் கறுப்பு பண தகவலை கட்சியினரே தெரிவிப்பார்கள்: வருமானவரித் துறை முன்னாள் அதிகாரி தகவல்

Published on

அரசியல்வாதிகள் பதுக்கி வைத்திருக்கும் கறுப்பு பணம் குறித்ததகவல்களை கட்சி தொண்டர்களேதெரிவிப்பார்கள் என்று வருமான வரித் துறை முன்னாள் அதிகாரி தெரிவித்தார்.

தமிழக சட்டப்பேரவை தேர்தல்வரும் 6-ம் தேதி நடக்க உள்ளது. இந்நிலையில் வாக்காளர்களுக்கு ஓட்டுக்காக பணம் கொடுப்பதைதடுக்க தேர்தல் ஆணையம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

சட்டவிரோத பணப் பரிமாற்றத்தை தடுக்க, அரசியல் கட்சியினர்,குடும்ப உறுப்பினர்கள், அவர்களுடன் தொடர்பில் இருப்பவர்களின் வீடு, அலுவலகங்களில் வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி பல கோடி ரூபாய் பணத்தை பறிமுதல் செய்துள்ளனர். வேட்பாளர்களின் நேரடி தொடர்பில் உள்ளநபர்களிடம் இருந்து மட்டும் இதுவரை ரூ.65 கோடி கைப்பற்றப்பட்டுள்ளதாக வருமான வரித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், அரசியல் கட்சியினர் பணம் பதுக்கி வைத்திருக்கும் இடம் குறித்த தகவலை வருமான வரித் துறை அதிகாரிகள் எப்படி கண்டுபிடிக்கின்றனர் என்பது குறித்து வருமான வரித் துறையில் உதவி ஆணையராக பணிபுரிந்து ஓய்வு பெற்ற முன்னாள் அதிகாரி ஒருவர் கூறியதாவது:

அரசியல்வாதிகள் மற்றும் அவர்களுக்கு உதவி செய்யும் தொழிலதிபர்கள் பதுக்கி வைத்துள்ள கறுப்பு பணம், தேர்தல் நேரத்தில் மட்டுமே அப்பட்டமாக வெளியே வரும். அப்படி வெளியே கொண்டுவரப்படும் பணம் குறித்து தகவல் கொடுக்க, கட்சி தொண்டர்கள் சிலரையே நாங்கள் தயார் செய்து வைத்திருப்போம்.

தவிர, கட்சியில் பல ஆண்டுகள் இருந்தும் பலருக்கு போட்டியிட சீட் கிடைக்காது. இதனால் மிகுந்த அதிருப்தியில் இருக்கும் அந்த நபர்கள் தானாக முன்வந்து, சீட் கிடைத்த தனது கட்சி வேட்பாளரின் பணப் பட்டுவாடா விவரங்களை வருமான வரித் துறைக்கு ரகசியமாக தெரிவிப்பார்கள். அப்படி அவர்கள் தரும் தகவல் உறுதியாக இருக்கும்பட்சத்தில் மட்டுமே சோதனையில் ஈடுபடுவோம்.

இதில் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சிஎன்றெல்லாம் பாரபட்சம் பார்க்கமாட்டோம். தகவலின் நம்பகத்தன்மையை பொருத்து சோதனை நடத்தி, பணத்தை கைப்பற்றி விடுவோம். அந்த பணம் ஆளுங்கட்சியினருடையதாக இருந்தால் அவர்கள் அழுத்தம் கொடுக்க ஆரம்பிப்பார்கள். அதன் பிறகு, உயரதிகாரிகள் கூறுவதுபோல செய்வோம்.

தேர்தல் நேரத்தில் பணம் கைப்பற்றப்படுவது தொடர்பான வழக்குகளில் பெரும்பாலும் அரசியல்வாதிகளின் பினாமிகளே அதிகம் சிக்குகின்றனர். அவர்களும், பிடிபடும் பணத்துக்கான அதிகபட்ச அபராதத் தொகையை கட்டிவிட்டு தப்பித்து விடுகிறார்கள். இதனால், உண்மையாக கறுப்பு பணம் பதுக்கி வைத்திருப்பவர்கள் சிக்குவதும் இல்லை; அவர்களுக்கு உரிய தண்டனை கிடைப்பதும் இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in