

வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் ஒதுக்கீடு விவகாரத்தில் தேர்தலுக்காக நாடகம் நடத்துகின்றனர் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்தார்.
தேனி மாவட்டம் போடியில் திமுக வேட்பாளர்கள் தங்க தமிழ்ச்செல்வன் (போடி), என்.ராமகிருஷ்ணன் (கம்பம்), மகாராஜன் (ஆண்டிபட்டி), கேஎஸ்.சரவணக்குமார் (பெரியகுளம்) ஆகியோரை ஆதரித்து ஸ்டாலின் பேசியதாவது:
முதல்வரும், துணை முதல்வரும் எதிரும் புதிருமாக உள்ளனர்.ஆனால் போடியில் முதல்வர் தனது பிரச்சாரத்தில் இறைவனால் கொடுக்கப்பட்ட கொடை ஓபிஎஸ் என்று புகழ்ந்துள்ளார். மேலும் அதிமுகவுக்குத் துரோகம் செய்தவர்கள் டெபாசிட்கூட வாங்க முடியாதுஎன்று பேசியுள்ளார். ஓ.பன்னீர்செல்வம் தான் அதிமுகவுக்கு எதிராக வாக்களித்துத் துரோகம் செய்தவர். எனவே, துணை முதல்வரைத்தான் பழனிசாமி மறைமுகமாக திட்டியுள்ளார்.
அரசியலில் சிலருக்குத்தான் வாய்ப்புக் கிடைக்கும். ஓபிஎஸ்-க்கு3 முறை முதல்வர் வாய்ப்புகிடைத்தபோதும் அதைப் பயன்படுத்தி போடி தொகுதிக்கோ, தமிழகத்துக்கோ எந்த நன்மையையும் செய்யவில்லை.
ஜெயலலிதாவிடமும் உண்மையாக இல்லை. அவர் இறந்ததும் விசாரணை கமிஷன் வேண்டும் என்றார்.தியானம் செய்தார். ஜெயலலிதா ஆவியுடன் பேசினார். ஆனால்,துணை முதல்வர் பதவி கிடைத்ததும் மனம் மாறிவிட்டார்.
போடி தொகுதியில் சிறு தொழிற்சாலையைக்கூட ஓபிஎஸ் உருவாக்கவில்லை. ஏற்கெனவே இருந்த 2 பெரிய தொழிற்சாலைகளும் சமீபத்தில் மூடப்பட்டன. இதனால் ஆயிரக்கணக்கானோர் வேலை இழந்துள்ளனர்.
தேர்தலுக்காக உள் ஒதுக்கீடு என்ற சட்டத்தை நிறைவேற்றி உள்ளனர். அப்போதெல்லாம் எதிர்ப்புக் காட்டாத ஓ.பன்னீர்செல்வம், இப்போது இது தற்காலிகமான சட்டம் என்று கூறுகிறார். மக்களை ஏமாற்ற தேர்தலுக்காக இதுபோன்ற நாடகத்தை நடத்துகின்றனர். திமுக வெற்றி பெற்றதும் சமூக நீதி நிலைநாட்டப்படும் வகையில் சட்டம் இயற்றப்படும். அதேபோல் பேரவையில் முதல் கூட்டத்தில் வேளாண் திருத்தச் சட்டத்தைக் கண்டித்து தீர்மானம் இயற்றுவோம்.
தாராபுரம் பிரச்சார மேடையில் பிரதமரைப் பாராட்டுவதாக நினைத்து ஜல்லிக்கட்டு நாயகன் மோடிதான் என்கிறார். இவ்வளவு நாளும் ஜல்லிக்கட்டு நாயகன் என்று தன்னைப் புகழ்ந்து விளம்பரம் கொடுத்தவர், இப்போது பிரதமரை குஷிப்படுத்த அப்படியே மாற்றிப் பேசுகிறார்.
ஜல்லிக்கட்டை மீட்டதற்கு நமது இளைஞர்கள்தான் காரணம்.எந்த அரசியல்வாதியும் சொந்தம் கொண்டாட முடியாது. அப்படிப்பட்ட இளைஞர்களை நீங்கள் கொச்சைப்படுத்தாதீர்கள். இவ்வாறு அவர் பேசினார்.