Published : 01 Apr 2021 03:15 AM
Last Updated : 01 Apr 2021 03:15 AM

பழைய ஓய்வூதிய திட்டம், பதவி உயர்வு உட்பட அரசு ஊழியரின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்: பாமக நிறுவனர் ராமதாஸ் வாக்குறுதி

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதிய முறையையே அமல்படுத்துவது, போக்குவரத்துக் கழக ஊழியர்களை அரசுஊழியர்கள் ஆக்குவது உள்ளிட்டஅனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் உறுதி அளித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:

புதிய ஓய்வூதிய முறையை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதிய முறையை மீண்டும் கொண்டுவர வேண்டும் என்பதுதான் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் நீண்டகால கோரிக்கை. இதற்காக பாமகதொடர்ந்து போராடி வருகிறது.2021 சட்டப்பேரவை தேர்தலுக்கான பாமக தேர்தல் அறிக்கையிலும் இந்த வாக்குறுதி இடம்பெற்றுள்ளது. முதல்வர் பழனிசாமி தலைமையில் புதிய அரசு அமைந்தவுடன் இக்கோரிக்கையில் உள்ள நியாயங்களை வலியுறுத்தி, அதை நிறைவேற்றி தர பாமக பாடுபடும்.

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகள் களையப்படும். அவர்களுக்கு 10 ஆண்டுகளுக்கு ஒரு பதவி உயர்வு கிடைப்பது உறுதி செய்யப்படும். அரசு ஊழியர்களின் குறைகளை கேட்டறிந்து நிறைவேற்ற தனி ஆணையம் அமைக்கப்படும் என்பது உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை அளித்துள்ள பாமக அவற்றை நிச்சயம் நிறைவேற்றித் தரும்.

போக்குவரத்து ஊழியர்

போக்குவரத்து கழக ஊழியர்கள் அனைவரையும் அரசு ஊழியர் ஆக்க வேண்டும். ஓய்வுபெற்ற போக்குவரத்து கழக தொழிலாளர்களுக்கு அனைத்து நிலுவை தொகையும் உடனே வழங்கப்பட வேண்டும் என்பது பாமகவின் நிலைப்பாடு. அவையும் நிறைவேற்றப்படுவதை பாமக உறுதி செய்யும்.

அதிமுக ஆட்சியில் நியமிக்கப்பட்ட 45 ஆயிரம் ஆசிரியர்கள், 2006 ஜூன் 1-ம் தேதி பணி நிரந்தரம் செய்யப்படுவதற்கு முன்புதொகுப்பூதிய அடிப்படையில் பணியாற்றிய 23 மாதங்கள் அவர்களது பணிக் காலமாக சேர்க்கப்படும். அரசு பல்கலைக்கழகங்கள், பல்கலைக்கழக இணைப்பு கல்லூரிகளில் தொகுப்பூதியத்தில் பணியாற்றும் அனைவரும் பணி நிலைப்பு செய்யப்படுவார்கள்.

பெண் ஊழியருக்கு விடுப்பு

அரசு ஊழியர்களில் 40 வயதுக்கு உட்பட்ட பெண் ஊழியர்களுக்கு மட்டும் தற்செயல் விடுப்பு12 நாட்களில் இருந்து 24 நாட்களாக அதிகரிக்கப்படும். மகப்பேறுவிடுப்பு ஓராண்டாக அதிகரிக்கப்படும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளையும் பாமக கண்டிப்பாக நிறைவேற்றும்.

தமிழக அரசு துறைகளில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கு மத்திய அரசுக்கு இணையாக குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ.3,500 வழங்கப்படும். ஓய்வூதியம் பெறுவதற்கான குறைந்தபட்ச பணிக் காலம் 30 ஆண்டுகளில் இருந்து 25 ஆண்டுகளாக குறைக்கப்படும். அரசு பணியில் இருந்துஓய்வு பெறும் நாளில், அனைத்து வகையான ஓய்வூதியப் பயன்களும் வழங்கப்படுவது உறுதி செய்யப்படும் என்பது உள்ளிட்ட வாக்குறுதிகளையும் பாமக வழங்கியுள்ளது. இந்த வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x