

ஆலந்தூர் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தா.மோ.அன்பரசனை ஆதரித்து காங்கிரஸ் சார்பில் சென்னை நங்கநல்லூரில் நேற்று பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கலந்து கொண்டு பேசியதாவது:
நான் நிதியமைச்சராக இருந்தபோது ஒரு பீப்பாய் கச்சா எண்ணெயின் விலை 105 டாலர்களாக இருந்தது. அப்போது பெட்ரோல் ரூ.60-க்கும், டீசல் ரூ.53-க்கும் விற்பனை செய்யப்பட்டது. கச்சா எண்ணெயின் விலை தற்போது மூன்றில் ஒரு பங்கு குறைந்து 70 டாலர்களாக உள்ளது. ஆனாலும், பெட்ரோல் விலையை ரூ.94-க்கும், டீசல் ரூ.87-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
மக்களின் உழைப்பை சுரண்டுகிற அரசுகளாகவே பாஜக அதிமுக இருக்கின்றன.
முதல்வர் பழனிசாமி தேர்தலுக்காக கடன்களை ரத்து செய்வதாக அறிவித்துள்ளார். ஆனால் இதற்கான நிதி ஒதுக்கீட்டுக்கு தேவையான செயல் திட்டங்களை அதிமுக வகுக்கவில்லை. வெற்று அறிவிப்புகளை வெளியிட்டு மக்களை ஏமாற்றி வருகின்றனர். இது வெற்றி நடை போடும் அரசு இல்லை. வெற்று அறிவிப்பு வெளியிடும் அரசாகும். குடியுரிமை திருத்த சட்டம், வேளாண் சட்டங்கள் ஜிஎஸ்டி வரி பணமதிப்பிழப்பு நடவடிக்கைகள் தவறான பொருளாதாரக் கொள்கையால் நாட்டை சீரழித்து விட்டது.
இவ்வாறு அவர் பேசினார்.
இதனையடுத்து, கொளத்தூரில் மு.க.ஸ்டாலின், துறைமுகத்தில் சேகர் பாபு மற்றும் பெரும்புத்தூர் காங்கிரஸ் வேட்பாளர் கு.செல்வ பெருந்தகை ஆகியோரை ப.சிதம்பரம் பிரச்சாரம் மேற்கொண்டார்.