

ஆந்திர மாநிலத்தையொட்டி அமைந்துள்ள கும்மிடிப்பூண்டி தொகுதியில், வன்னியர், தலித் சமூகத்தினர் கணிசமாக உள்ளனர். அதேபோல, தெலுங்கு பேசும் நாயுடு சமூகத்தினரும் அதிக அளவில் வசிக்கின்றனர்.
இந்த தொகுதியில் நடைபெற்ற 15 தேர்தல்களில் 8 முறை அதிமுகவும், 4 முறை திமுகவும், தலா ஒருமுறை சுதந்திரா கட்சி, காங்கிரஸ், தேமுதிகவும் வெற்றி பெற்றுள்ளன. இங்கு, ஆண்கள் 1,37,027 பேர், பெண்கள் 1,43,708 பேர், மூன்றாம் பாலினத்தவர் 41 பேர் என மொத்தம் 2,80,776 வாக்காளர்கள் உள்ளனர்.
களத்தில் 12 பேர்
காற்று, நிலத்தடி நீரில் அதிக மாசு, நிலத்தடி நீரை அதிகம் உறிஞ்சும் குடிநீர் உற்பத்தி மையம் ஆகியவை முக்கியப் பிரச்சினைகளாகும். மேலும், அரசு கலைக் கல்லூரி, நிரந்தர நேரடி கொள்முதல் நிலையங்கள் அமைக்க வேண்டும் உள்ளிட்டவை நீண்டகால கோரிக்கைகளாகும்.
இந்த தேர்தலில் திமுக, பாமக, தேமுதிக, அமமுக, நாம் தமிழர், இந்திய ஜனநாயக கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர்கள், 5 சுயேச்சை வேட்பாளர்கள் என மொத்தம் 12 பேர் களத்தில் இருந்தாலும், திமுக- பாமக கட்சிகளிடையேதான் கடும்போட்டி நிலவுகிறது.
பாமக வேட்பாளராக, அக்கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலர் எம்.பிரகாஷ் போட்டியிடுகிறார். பாமக, அதிமுகவின் வாக்கு வங்கி இவருக்கு பலம். ஆனால், வேறு தொகுதியைச் சேர்ந்தவர் என்பதும், அதிமுகவுக்கு இத்தொகுதியை ஒதுக்காமல், கூட்டணிக் கட்சிக்கு ஒதுக்கியதால் ஏற்பட்ட அதிருப்தியும் இவரது பலவீனங்கள்.
திமுக வேட்பாளர் டி.ஜெ.கோவிந்தராஜன், தொகுதி மக்களுக்கு நன்கு அறிமுகமானவர். சமையல் காஸ், பெட்ரோல், டீசல் விலை உயர்வு உள்ளிட்டவைகளால் மத்திய பாஜக அரசு மீது மக்களுக்கு ஏற்பட்டுள்ள அதிருப்தி இவருக்கு பலமாகும். எனினும், கல்வி, வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கியுள்ளதால், திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளில் உள்ள வன்னியர்களின் வாக்குகள், பாமக வேட்பாளருக்கு கிடைக்க வாய்ப்புள்ளது, மொத்தத்தில், இந்த தொகுதியில் திமுக-பாமக வேட்பாளர்களிடையே கடும் போட்டி நிலவுவது குறிப்பிடத்தக்கது.