

கமுதி பேருந்து நிலையம் அருகே நேற்று மாலை முதுகுளத்தூர் தொகுதி அமமுக வேட்பாளர் முருகனை ஆதரித்து, அக்கட்சி பொதுச் செயலாளர் டிடிவி. தினகரன் பேசியதாவது:
அதிமுகவினர் இதை ஜெயலலிதா ஆட்சி என்கின்றனர். அவரது ஆட்சியாக இருந்தால் டீசல், பெட்ரோல் விலை உயர்ந்திருக்குமா? நீட் தேர்வு வந்திருக்குமா. இது ஒரு துரோக ஆட்சி. தமிழகத்தின் உரிமைகளை விட்டுக் கொடுத்தவர் எடப்பாடி பழனிசாமி.
அமமுக மக்களை நம்பி தேர்தலில் போட்டியிடுகிறது. மற்றவர்கள் பணத்தை நம்பி போட்டியிடுகிறார்கள். முதுகு ளத்தூரில் நிற்கும் அதிமுக வேட்பாளர் கீர்த்திகா முனியசாமி, எந்த ஊருக்குச் சென்றாலும் ஒப்பாரி வைக்கிறாராம். இவர் ஓபிஎஸ் ஊர்க்காரர். தலைவன் எவ்வழியோ தொண்டனும் அவ் வழியே. இவர்களை துரோகி என்று சொல்லாமல் எப்படி சொல்வது.? இத்தொகுதியில் தீய சக்தியால் அடையாளம் காட்டப்பட்டவர் திமுக வேட்பாளர் ராஜ கண்ணப்பன். இவர் வாக்கு எண்ணுவதற்குள்ளேயே, வேறு கட்சிக்குச் சென்று விடுவார். கச்சத்தீவை தாரை வார்த்துக் கொடுத்தது திமுக. பத்தாண்டாக திமுக காய்ந்து கிடக்கிறது. அமமுக தேர்தல் அறிக்கையில் 100 சிறப்பான திட்டங்கள் உள்ளன. இவ்வாறு அவர் பேசினார்.