

தேர்தல் பிரச்சாரத்தில் திமுகவினர் தரம் தாழ்ந்து பேசுவதால், பிரச்சாரம் செய்வதற்கே தயக்கமாக உள்ளது என பாஜக தேசிய செயற்குழு உறுப்பினரும், மூத்த தலைவருமான இல.கணேசன் தெரிவித்தார்.
தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு தொகுதியில் பாஜக வேட்பாளர் பூண்டி எஸ்.வெங்கடேசனை ஆதரித்து, திருச்சோற்றுத்துறை பகுதியில் நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட இல.கணேசன், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியது:
தமிழகத்தில் நடைபெறவுள்ளதை சட்டப்பேரவைத் தேர்தல் மட்டும் என நான் நினைக்கவில்லை. இருவேறு கருத்துகளுக்கும், இருவேறு சித்தாந்தங்களுக்கும் இடையே நடைபெறும் ஒரு மோதல். சொல்லப் போனால், தர்ம யுத்தம்.
ஒரு பக்கம் பாண்டவர்களும், மறுபக்கம் கவுரவர்களும் இருப்பதுபோன்று, பாண்டவர் அணிக்கு எங்களின் முதல்வர் பழனிசாமி அர்ஜூனன் போல தலைமை தாங்கி நிற்கிறார். இது தர்மத்துக்காக போராடக்கூடிய அணி. எதிர்புறத்தில் துரியோதனன் போல ஸ்டாலினும், அவர்களுடைய ஆட்களும் நிற்கிறார்கள். இந்த இடத்தில் நிச்சயமாக தர்மம் வெல்லும். கருணாநிதிக்கு இருந்த ஆற்றல், திறமை, தமிழினப் பற்றில் நூற்றில் பத்து சதவீதம்கூட தற்போதுள்ளவர்களுக்கு இல்லை.
முதல்வர் பழனிசாமியின் பெயர், அவர் முதல்வரான பிறகுதான் எனக்குத் தெரியும். ஆனால், இந்த 4 ஆண்டு காலத்தில் பல்வேறு சோதனைகள், பிரச்சினைகள், ஆட்சியைக் கவிழ்ப்பதற்கான முயற்சிகள் என அத்தனையையும் சமாளித்து, மிக திறமையான முறையில் ஆட்சியை நடத்தி, தேர்தல் வரை கொண்டு வந்திருக்கிறார். அவருக்கு இருக்கும் ஆளுமை, திறமை எதிர் அணியில் இருப்பவருக்கு இல்லை.
10 ஆண்டுகளாக ஆட்சிப் பொறுப்பில் இல்லாமல் திமுகவினர் காய்ந்துபோய் உள்ளனர். எனவே, “காய்ந்தமாடு கம்மங்காட்டில் புகுந்த மாதிரி” என்ற நிலை வரக்கூடாது. இந்த தேர்தல் பிரச்சாரத்தில் திமுகவினர் தரம் தாழ்ந்து பேசுகின்றனர். இதனால், என்னைப் போன்றவர்கள் எல்லாம் தேர்தல் பிரச்சாரம் செய்வதற்கே தயக்கமாக இருக்கிறது. பிரச்சாரக் களம் வீணாகிவிட்டது என்றார்.