Published : 31 Mar 2021 09:33 PM
Last Updated : 31 Mar 2021 09:33 PM

திமுகவில் பெண்களை இழிவுபடுத்துகிறார்கள் எனப் பிரதமர் பேசுவது அவரது தகுதிக்கு அழகல்ல: மதுரையில் வைகோ பேச்சு 

மதுரை கோ.புதூரில் மதுரை வடக்கு தொகுதி திமுக வேட்பாளர் கோ.தளபதியை ஆதரித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேசினார். படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி. 

திமுகவில் பெண்களை இழிவுபடுத்துகிறார்கள் எனப் பிரதமர் மோடி பேசுவது அவரது தகுதிக்கு அழகல்ல என மதுரையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தேர்தல் பிரச்சாரத்தில் பேசினார்.

மதுரை கோ.புதூரில் மதுரை வடக்கு தொகுதி திமுக வேட்பாளர் கோ.தளபதியை ஆதரித்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தேர்தல் பிரச்சாரம் செய்தார்.

அப்போது அவர் பேசியதாவது: நடைபெறும் தேர்தலில் திமுக கூட்டணி 234 வெற்றி பெறும் என்று கூட்டணி தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஓட்டுகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்போது அது உண்மை என்று நிரூபிக்கப்பட்டுவிடும்.

பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாட்டிற்கு வந்து ஒரு கருத்தை சொல்லியிருக்கிறார். இது அவர் தரத்திற்கு அழகல்ல, தகுதிக்கு அழகல்ல. தமிழ்நாட்டில் திமுகவில் பெண்களை, தாய்மார்களை இழிவுபடுத்துகிறார்கள்.

பெண்களை மதிப்பதில்லை என பிரதமர் பேசுகிறார். நீங்கள் இப்படி பேசலாமா?. யோகி ஆதித்யநாத் ஆட்சி புரிவது எந்த மாநிலத்தில், ஆப்பிரிக்காவிலா? கனடாவிலா இந்தியாவில்தானே, உத்தரபிரதேசத்தில்தானே.

உத்தரப் பிரதேசத்தில் என்சிஆர்பி சார்பில் 2019ல் அறிக்கையில் 59 ஆயிரத்து 853 குற்றங்கள் இந்தியாவிலேயே அதிகமான குற்றங்கள் நிகழ்ந்ததாக தெரிவித்துள்ளனர். இந்தியாவில் அதிகமான குற்றங்கள் நிகழ்ந்த மாநிலங்களில் 14 சதவீதம் பாஜக ஆளும் உத்தரபிரதேசத்தில்தான் நிகழ்ந்துள்ளது என புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. 2020 செப் 14ம் தேதி ஹத்ரஸ் எனுமிடத்தில் ஒரு தலித் பெண் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். இது எந்த மாநிலத்தில் நிகழ்ந்தது. நான் பிரதமரிடம் கேட்கிறேன். உங்களின் நேரடிப்பார்வையில் உள்ள உத்தரபிரதேசத்தில்தானே இந்த படுகொலை சம்பவம் நிகழ்ந்தது.

நீங்கள் தமிழ்நாட்டைப் பற்றியும் எட்டையபுரத்தைப் பற்றியும் பாரதியாரைப் பற்றியும், திருவள்ளுவரைப் பற்றியும் பேசுகிறீர்கள். இவைகளையெல்லால் சொன்னால் தமிழர்களை ஏமாற்றிவிடலாம், தமிழர்கள் எளிதில் ஏமாந்துவிடுவார்கள் என நீங்கள் பேசுகிறீர்கள். தூத்துக்குடி என்ற ஊர் இந்தியாவில் அதுவும் தமிழ்நாட்டில் இருப்பது உங்களுக்கு தெரியுமா. அங்கிருந்துதான் சிதம்பரம் பிள்ளை கப்பலோட்டினார் என்பது உங்களுக்கு தெரியுமா.

அந்த தூத்துக்குடியில் உங்களின் நண்பர் அனில் அகர்வாலின் ஸ்டெர்லைட் கம்பெனி இருக்கிறது. அங்கு போராடிய துப்பாக்கிச் சூடு சம்பவம் 13 பேர் சுட்டுக்கொல்லப்பட்டார்கள். இந்த சம்பவம் உங்களுக்கு தெரியாதா?.

இப்படி கொடூரச்சம்பவங்கள் உங்களுக்கு தெரியாதா. நீங்கள் தமிழ்நாட்டில் வந்த எதுவேண்டுமானாலும் பேசலாம் என நினைக்கிறீர்கள். இங்கிருக்கும் அரசு ஊழல் அரசு, ஊழல் காரணமாகத்தான் புழு, பூச்சிகளைப்போல் உங்கள் காலடியில் கிடக்கிறார்கள். உண்மைத்தேரைகளாக, கொத்துப்பூச்சிகளாக இருக்கிறார்கள்.

அதனால்தான் திமுக தலைவர் ஸ்டாலின், தமிழக ஆளுநரிடம் புகார் கொடுத்தார். அதில் முதலமைச்சர் நெடுஞ்சாலைத்துறை, பொதுப்பணித்துறை ஒப்பந்த வேலைகளை ரூ.6300 கோடி கொடுத்துள்ளார். வருமானத்துக்கும் அதிகமாக ரூ.200 கோடி சொத்து சேர்த்துள்ளார் என புகார் கொடுத்துள்ளார். வழக்கம்போல் ஆளுநர் அதனை குப்பைத்தொட்டியில் போட்டுவிட்டார்.

தமிழக அமைச்சர்கள் மீது ஊழல் புகார்கள் இருக்கின்றன. இதனால் தான் இவர்கள் மத்திய அரசின் காலடியில் புழு, பூச்சிகளைப்போல் நெளிந்து கிடக்கிறார்கள்.

இவர்களால் தமிழ்நாட்டுக்கு எந்த திட்டத்தையும் பெற முடியாது. இதனால்தான் விவசாயிகளுக்கு எதிரான சட்டங்களை ஆதரித்து ஓட்டுப்போட்டார்கள். இவர்களும் பாமக எதிர்த்து ஓட்டுப்போட்டிருந்தால் அந்த சட்டம் நிறைவேறி இருக்காது. இவர்களால் தமிழகம் நாசமாகப் போய்க்கொண்டிருக்கிறது. அம்பானி, அதானி போன்ற கார்ப்பரேட் நிறுவனங்கள்தான் ஆட்சி நடத்துகின்றன. இந்த ஆட்சியை தோற்கடிக்க மக்கள் தயாராகிவிட்டனர்.

இதனால்தான் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்றபின்பு வேளாண் சட்டங்களை ரத்து செய்ய சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என அறிவித்துள்ளார். வேளாண்துறைக்கென தனி பட்ஜெட் போடுவோம் என பல திட்டங்களை அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் தானே புயல், கஜா புயல், ஓக்கி புயல் உள்ளிட்ட பல்வேறு புயல்களின் போது லட்சக்கணக்கான ஏக்கரில் பயிர்கள் சேதம் ஏற்பட்டன. அதற்கு நீங்கள் மத்திய அரசிடம் நிவாரணமாக கேட்டது 1 லட்சத்து 45 ஆயிரத்து 474 கோடி. ஆனால் மத்திய அரசு வழங்கியது ரூ.6434கோடிதான்.

நீங்கள் கேட்டதில் 4 விழுக்காடுதான் கொடுத்தார்கள். அதிமுக அரசு தமிழர்களின் உரிமைகளை காவு கொடுத்துவிட்டது. இளைஞர்கள், பெண்களாகிய நீங்கள் தான் மாற்றத்தை கொண்டுவரமுடியும். அரசியல் மாற்றம் தமிழகத்தில் ஏற்படும்.

இந்த ஆட்சி மாற்றத்தால் அதிமுக ஊழல் ஆட்சி அகற்றப்படும். ஸ்டாலின் தலைமையில் புதிய ஆட்சி மலரும். அதற்கு வேட்பாளர் தளபதிக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x