Last Updated : 31 Mar, 2021 08:28 PM

 

Published : 31 Mar 2021 08:28 PM
Last Updated : 31 Mar 2021 08:28 PM

புதுச்சேரியில் பாஜக இந்தத் தேர்தலிலும் டெபாசிட்டை இழக்கும்: கி.வீரமணி பேச்சு

புதுச்சேரி

புதுச்சேரியில் பாஜக டெபாசிட் இழக்கும் என்றும், ரங்கசாமி, நமச்சிவாயம் இருவருமே முதல்வராக முடியாது. பாஜகவின் திட்டமே வேறு, அந்த இடத்துக்கு வேறு ஒரு பெண்மணியை வைத்துள்ளனர் என்றும் திராவிடர் கழகத்தின் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி மாநில திராவிடர் கழகத்தின் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் சுதேசி மில் அருகில் இன்று (மார்ச் 31) மாலை நடைபெற்றது. முன்னாள் முதல்வர் நாராயணசாமி முன்னிலை வகித்தார்.

திராவிடர் கழகத்தின் தலைவர் கி. வீரமணி கலந்து கொண்டு பேசியதாவது, ‘‘தமிழகம், புதுச்சேரியில் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெறும் சட்டப்பேரவை தேர்தல் வித்தியாசமானது.

அதிலும் புதுச்சேரியில் இன்னும் வித்தியாசமான தேர்தல். தமிழகத்தில் உள்ள ஆட்சி தெளிவாக கவிழ்க்கப்படவோ, மாற்றப்படவோ இல்லாமல் வந்துள்ளது. ஆனால் புதுச்சேரியில் நடைபெறக்கூடிய தேர்தல் இந்தியாவே உற்றுப்பார்க்கக்கூடிய அளவுக்கு இருக்கிறது.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு காங்கிரஸ் தலைமையில் நடைபெற்ற ஆட்சியை பாஜக டெல்லி அதிகாரத்தை பயன்படுத்தியும், மோடி வித்தைகளை பயன்படுத்தியும் கடந்த பிப்ரவரியில் கவிழ்த்தது. இத்தகைய ஜனநாயக படுகொலையை செய்துவிட்டு, இங்கேயே வந்து பிரதமர் ஜனநாயகவாதிபோன்று பேசுகிறார்.

ஆகவே மக்கள் சிந்திக்க வேண்டும். இது எங்களுடைய பிரச்சனை அல்ல. புதுச்சேரி மக்களின் உரிமைப் பிரச்சனை. 5 ஆண்டுகளில் நாராயணசாமி என்ன செய்தார் என்று இப்போது கேட்கின்றனர். காங்கிரஸ் கூட்டணி கட்சி நான்கே முக்கால் ஆண்டுகள் ஆட்சியை நடத்தியதே முதல் சாதனை.

ஒவ்வொரு நாளும் முள் படுக்கையின் மீது அமர்ந்துகொண்டிருந்ததுபோல ஆட்சி நடத்தினார்கள். ஆகவே அவர்கள் கேட்பதே வேடிக்கையாக இருக்கிறது. கடந்த தேர்தலில் 30 தொகுதிகளில் பாஜக போட்டியிட்டது.

ஆனால் இதில் 30 இடங்களிலும் தோல்வியை தழுவியது மட்டுமல்லாமல் 29 இடங்களில் டெபாசிட்டை இழந்து அரிய சாதனையை பாஜக நிகழ்த்தியுள்ளது.

இந்த சாதனையோடுதான் மோடியை அழைத்து வருகின்றனர். வாக்காளர்களை சந்திக்கின்றனர். அவர்களுக்கு 30 வேட்பாளர்கள் கிடைத்ததே அதிசயம். வருகின்ற தேர்தலிலும் அதுதான் நடக்கப்போகிறது. அனைத்து தொகுதிகளிலும் டெபாசிட் இழக்கப்போகின்றனர். அதில் எந்த சந்தேகமும் இல்லை.

தமிழகத்திலும் 20 இடங்களில் ஒரு இடங்களில் கூட பாஜக வெற்றிபெறாது. தேர்தலில் வெற்றி பெருவதற்கு முன்பாகவே பாஜக அதிகார துஷ்பிரயோகம் செய்கிறது. இவர்கள் ஆட்சிக்கு வந்துவிட்டால் என்னென்ன செய்வார்கள் என்பதை சிந்தித்து பார்க்க வேண்டும்.

கிரண்பேடியை நியமித்து மக்கள் நலத்திட்டங்களை தடுத்ததோடு, பல தொல்லைகளை கொடுத்தனர். இந்தியாவிலேயே முதல்வர் ஒருவர் அதிகமுறை மக்களுக்காக போராட்டம் நடத்திய மாநிலம் புதுச்சேரி தான்.

புதுச்சேரியில் காங்கிரஸ் ஆட்சியை கவிழ்த்த நிலையில், காங்கிரஸில் இருந்து தாவியவருக்கும், மற்றொருவருக்கம் இடையே முதல்வர் யார் என்பதில் சிக்கல் ஏற்பட்டது.

இங்கு ஒவ்வொருவரும் முதல்வர் கனவில் தான் தூங்குகின்றனர். ஆனால் இங்கு யாரும் முதல்வராகப் போவதில்லை. பாஜகவின் திட்டமே வேறு. ஒரு பெண்மணியை தயாராக வைத்துள்ளனர்.

தமிழத்தைச் சேர்ந்தவர் என்று பேச வைத்துக்கொண்டே, இங்கு கொண்டு வந்து ஆயத்தப்படுத்த தேர்தல் காலத்தில் அடையாளம் காட்டிவிட்டு சென்றுள்ளனர். ஆகவே ரங்கசாமி, நமச்சிவாயம் இருவருமே முதல்வராக வர முடியாது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x