Last Updated : 31 Mar, 2021 08:12 PM

 

Published : 31 Mar 2021 08:12 PM
Last Updated : 31 Mar 2021 08:12 PM

கோயில் முன்பாக தேர்தல் அறிக்கை வெளியிட்ட ரங்கசாமி: மாநில அந்தஸ்தே தீர்வு- மாநிலக்கடன் ரூ.8863 கோடி தள்ளுபடி- மத்திய அரசை வலியுறுத்த முடிவு

தேர்தல் பிரச்சாரத்தின் போது சாலையில் கோயில் முன்பாக தேர்தல் அறிக்கையை வெளியிட்ட என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி. படம்: எம். சாம்ராஜ்

புதுச்சேரி

தேர்தல் பிரச்சாரத்தின் போது சாலையில் பிரச்சார வாகனத்தில் நின்றபடி கோயில் முன்பாக தேர்தல் அறிக்கையை என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரங்கசாமி புதுச்சேரியில் வெளியிட்டார்.

மாநில அந்தஸ்தே தீர்வு - மாநிலக் கடன் ரூ. 8863 கோடியை தள்ளுபடி செய்ய மத்திய அரசை வலியுறுத்துவோம் என்று தெரிவித்துள்ளனர்.

காலியாக உள்ள 9400 அரசு பணியிடங்களும் ஓராண்டுக்குள் நிரப்பப்படும் என தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் தேர்தலில் போட்டியிடும் கட்சிகள் தேர்தல் அறிக்கையை கட்சி அலுவலகத்திலோ, உணவு விடுதியிலோ வெளியிடுவது வழக்கம். புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சித்தலைவர் ரங்கசாமி ராஜ்பவன் தொகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் இரவு ஈடுபட்டிருந்தார்.

எஸ்.வி. படேல் சாலையில் பெரியபாளையத்தம்மன் கோயில் வாயிலில் இன்று இரவு 7 மணிக்கு தேர்தல் அறிக்கையை ரங்கசாமி திடீரென்று வெளியிட்டார்.

தேர்தல் பிரச்சாரத்தில் சாலையின் நடுவே கோயில் வாயிலில் தேர்தல் அறிக்கையை வெளியிட்டு விட்டு பிரச்சாரத்தை தொடர்ந்தார்.

தேர்தல் அறிக்கை முக்கிய அம்சங்கள்:

ஆட்சியாளர்களுக்கு அதிகார வர்க்கத்தின் தடையற்ற ஒத்துழைப்பை உறுதி செய்ய மாநில அந்தஸ்தே தீர்வு. மத்திய அரசை அணுகி இலக்கை அடைவோம்.

மத்திய அரசால் கடந்த 1991ல் 90 சதவீதமாக இருந்த மத்திய நிதி 70 சதவீதமாகி 27 சதவீதமாக குறைந்துள்ளது. தற்போது புதுச்சேரி கடன் ரூ. 8863 கோடியை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்துவோம். மத்திய நிதிக்குழுவில் புதுச்சேரியை சேர்க்க வலியுறுத்துவோம்.பேரிடர் கால நிதியை ரூ. 100 கோடியாக உயர்த்த வேண்டும்.

காலியாக உள்ள 9400 அரசு பணியிடங்களும் ஓராண்டுக்குள் நிரப்பப்படும். மேட்டுப்பாளையத்தில் தனியார் நிறுவனங்கள் மூலம் தொழிற்சாலைகள் கொண்டு வரப்படும். அரசு பணியில் சேர வயது உச்ச வரம்பு 40 வயதாக தற்போதைக்கு உயர்த்தப்படும். புதுச்சேரியில் ஜவுளிப்பூங்கா அமைக்க மத்திய அரசை வலியுறுத்துவோம்.

தனியார் தொழிற்சாலைகளில் 80 சதவீதம் மண்ணின் மைந்தர்களை பணியமர்த்த சட்டம் கொண்டு வரப்படும். காமராஜர் மணி மண்டபத்தில் காமராஜர் மனித வள மேம்பாட்டு மையம் அமைக்கப்படும். உள்ளாட்சித் தேர்தல்கள் ஓராண்டுக்குள் நடத்தப்படும்.

அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவம், பொறியியல், இளநிலை படிப்புகளில் 10 சத இடங்கள் உள்ஒதுக்கீடு மூலம் நிரப்பப்படும். புதுச்சேரிக்கென உருவாக்கப்பட்ட தனி கல்வி வாரியம் செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும். தனியார் மருத்துவ கல்லூரிகளில் 50 சத அரசு ஒதுக்கீட்டு இடங்கள் பெற மத்திய அரசு ஒப்புதல் பெறப்படும். பள்ளிகளிலேயே மாணவர்களுக்கு சாதி, வசிப்பிடம் சான்றுகள் பழைய முறையில் தரப்படும்.

மாநிலத்திலுள்ள அனைத்து குடும்பங்களுக்கும் ரூ. 5 லட்சம் வரை மருத்துவ காப்பீட்டு திட்டம் அமலாக்கப்படும்.

ரேசன் கடைகள் மீண்டும் இயக்கப்படும். அரிசியுடன் பிற அத்தியாவசிப் பொருட்களும் மாதம் முழுவதும் மலிவு விலையில் தரப்படும். கரோனாவால் உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு தலா ஒரு லட்சம் கருணை தொகை தரப்படும். வக்பு வாரியம் விரைவில் அமைக்கப்படும்.

வேளாண்மையில் குறைந்தப்பட்ச ஆதார விலை தொடரும் என்ற பிரதமரின் உறுதிமொழியை வேளாண் சட்டத்தில் சேர்க்க வலியுறுத்தப்படும். காரைக்காலில் விமான சேவை தொடங்க வலியுறுத்தப்படும்.

மழைநீர் குடியிருப்புகளில் தேங்குவதை தடுக்க வடிகால் ஆக்கிரமிப்பு அகற்றி இரண்டு ஆண்டுக்குள் நிரந்தர தீர்வு காணப்படும். மினி பஸ் சேவையை மாநிலம் முழுக்க விரிவுப்படுத்துவோம்.

ஹெல்மெட் அணிவதிலிருந்து நகராட்சி எல்லைக்குள் விலக்கு அளிக்கப்படும். பெட்ரோல், டீசல், விலை லிட்டருக்கு ரூ. 2 குறைக்கப்படும். குப்பை வரி ரத்து செய்யப்படும். மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு பஸ்சில் பயணம் இலவசம்.

புதுச்சேரி நகரப்பகுதிகளில் உள்ள வீடுகளுக்கும், நகர்களுக்கும் குழாய் மூலம் சமையல் வாயு விநியோகிக்கும் திட்டம் செயல்படுத்தப்படும். இந்திராகாந்தி, ராஜீவ்காந்தி சதுக்கங்களில் மேம்பாலம் கட்டப்படும்.

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு பாடங்களுடன் கூடியே டேப்லெட்டும், 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு லேப்டாப்பும் தரப்படும் உள்ளிட்ட பல அறிவிப்புகள் இடம் பெற்றுள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x