

தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில், தேர்தலுக்கு 6 நாட்களே உள்ள நிலையில் தேர்தல் ஆணையம் அதிரடியாக ஐபிஎஸ் அதிகாரிகளை மாற்றி வருகிறது. கடந்த 10 நாட்களாக முக்கிய அதிகாரிகளை மாற்றி உத்தரவிட்ட தேர்தல் ஆணையம், நேற்று திருச்சி ஆணையரை மாற்றிய நிலையில், இன்று 2 மண்டல ஐஜிக்களை மாற்ற உத்தரவிட்டுள்ளது.
கடந்த வாரம் தென் மண்டல ஐஜியை மாற்றி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. பின் கோவையில் பணம் பிடிபட்ட விவகாரத்தில் மாவட்ட ஆட்சியர், காவல் ஆணையரை மாற்றித் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. இந்நிலையில் திருச்சியில் காவல் நிலையத்தில் பணம் வழங்கப்பட்டதாக எழுந்த விவகாரத்தில் திருச்சி காவல் ஆணையர் லோகநாதன் நேரடியாக விசாரணை நடத்தி ஆய்வாளர் உள்ளிட்ட சில போலீஸாரை சஸ்பெண்ட் செய்தார்.
இந்நிலையில் நேற்றிரவு திருச்சி காவல் ஆணையர் லோகநாதன், திருச்சி பொன்மலை சட்டம்- ஒழுங்கு உதவி ஆணையர் தமிழ்மாறன் ஆகியோரை உடனடியாக இடமாற்றம் செய்யவும், அவர்களைத் தேர்தல் அல்லாத பணியில் நியமிக்கவும் அதுவரை தலைமையிடத்தில் பணியில் இல்லாமல் இருக்கவும் உத்தரவிட்டது.
லோகநாதன், தினகரன், ஜெயராம்
இந்நிலையில் இன்று மாலை மத்திய மண்டல ஐஜி ஜெயராம், மேற்கு மண்டல ஐஜி தினகரன், கோவை ரூரல் எஸ்.பி. அருளரசு ஆகியோரை மாற்ற தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மத்திய மண்டல ஐஜியாக தீபக் தாமோர், மேற்கு மண்டல ஐஜியாக அமல் ராஜையும், திருச்சி காவல் ஆணையராக அருணையும் நியமிக்க உத்தரவிட்டுள்ளது.
கோவை ரூரல் எஸ்.பி.யாக செல்வ நாகரத்தினத்தை நியமிக்க உத்தரவிட்டுள்ள தேர்தல் ஆணையம், மாற்றப்பட்ட மேற்கு மண்டல ஐஜி தினகரன், மத்திய மண்டல ஐஜி ஜெயராம், கோவை ரூரல் எஸ்.பி. அருளரசு ஆகியோரைத் தேர்தல் ஆணைய உத்தரவின்றி வேறு பணியில் நியமிக்காமல் தலைமையிடத்தில் பணி இல்லாமல் வைத்திருக்க உத்தரவிட்டுள்ளது.
செல்வ நாகரத்தினம்
தேர்தல் ஆணைய நடவடிக்கையால் மத்திய மண்டலம் உள்ளிட்ட திருச்சி மாவட்டமே கூண்டோடு காலியாகியுள்ளது. தேர்தல் அறிவிக்கப்பட்ட நாள் முதல் தற்போது வரை திருச்சி மாவட்டத்தில், மாவட்ட ஆட்சியர், எஸ்.பி., காவல் ஆணையர், மத்திய மண்டல ஐஜி உள்ளிட்ட அனைவரையும் இடமாற்றம் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.