மணல் கொள்ளையில் ஈடுபட்ட சிவகங்கை அமைச்சர் மீது விசாரணை நடத்தப்படும்: கனிமொழி பேச்சு

மானாமதுரையில் அத்தொகுதி திமுக வேட்பாளர் தமிழரசியை ஆதரித்து பிரச்சாரம் செய்த திமுக மாநில மகளிரணிச் செயலாளர் கனிமொழி எம்.பி.
மானாமதுரையில் அத்தொகுதி திமுக வேட்பாளர் தமிழரசியை ஆதரித்து பிரச்சாரம் செய்த திமுக மாநில மகளிரணிச் செயலாளர் கனிமொழி எம்.பி.
Updated on
1 min read

‘‘மணல் கொள்ளையில் ஈடுபட்ட சிவகங்கை அமைச்சர் மீது விசாரணை நடத்தப்படும்,’’ என திமுக மாநில மகளிரணிச் செயலாளர் கனிமொழி எம்.பி தெரிவித்தார்.

மானாமதுரையில் அத்தொகுதி திமுக வேட்பாளர் தமிழரசியையும், சிவகங்கையில் அத்தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் குணசேகரன், திருப்பத்தூரில் அத்தொகுதி திமுக வேட்பாளர் கே.ஆர்.பெரியகருப்பனையும், காரைக்குடியில் அத்தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாங்குடியையும் ஆதரித்து அவர் பிரச்சாரம் செய்தார்.

அப்போது அவர் பேசியதாவது: தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளன. அதிமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு கிடையாது. பாஜக அரசு தமிழக மக்களுக்கு எதிராகக் கொண்டு வரும் அனைத்து சட்டங்களையும் அதிமுக அரசு ஆதரிக்கிறது.

அதிமுக அரசை இந்த தேர்தலில் அப்புறப்படுத்த வேண்டும். தமிழகத்தில் பாஜக ஓரிடத்தில் கூட வெற்றி பெற முடியாது. தோல்வி பயத்தால் பிரதமர் மோடி உள்ளிட்ட பல தலைவர்கள் தமிழகத்தில் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆட்சியில் பெண்களுக்கு எதிராக 60 ஆயிரம் குற்றங்கள் நடந்துள்ளன. இப்போது யோகி ஆதித்யநாத் தமிழகத்தில் அதிமுக கூட்டணிக்கு பிரச்சாரம் செய்கிறார்.

திமுக ஆட்சி அமைந்ததும் அனைத்து அதிமுக அமைச்சர்கள் மீதும் ஊழல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்படும். மணல் கொள்ளையில் ஈடுபட்ட சிவகங்கை அமைச்சர் மீதும் விசாரணை நடைபெறும்.

தமிழகத்தில் இருந்து இந்த ஆட்சி நடக்கவில்லை. டெல்லியில் இருந்து ஆட்சி நடக்கிறது. பாஜகவின் பினாமியாக செயல்படும் அதிமுக, விவசாயிகளுக்கு எதிரான சட்டத்தை ஆதரித்துவிட்டு தன்னை விவசாயி என்று பழனிசாமி சொல்கிறார்.

மக்களை முட்டாளாக்க நினைக்கிறவர்கள் தான் முட்டாளக்கப்பட்டு உள்ளனர். தமிழன் தமிழகத்தில் இருந்து ஆள வேண்டுமென மக்கள் தெளிவாக உள்ளனர்.

முதல்வராக இருந்த பெண்மணி மரணத்தில் சந்தேகம் ஏற்பட்டுள்ளதால் நியாயமாக விசாரணை நடத்தி இருக்க வேண்டாமா? ஆனால்இதுதொடர்பாக ஓரறிக்கை கூட விடவில்லை. ஆனால் இதுகுறித்து விசாரணை நடத்தப்படும் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

பெண்களுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்க மாவட்டந்தோறும் தனியாக நீதிமன்றங்கள் அமைக்கப்படும், என்று பேசினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in