

சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
சென்னை மாநகரின் குடிநீர் ஆதாரமாக பூண்டி, சோழவரம், செங்குன்றம், செம்பரம்பாக்கம் ஏரிகள் உள்ளன. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கன மழை பெய்து வருவதால், ஏரிகளுக்கு வரும் நீரின் அளவு அதிகரித்து வருகிறது.
நேற்று நிலவரப்படி பூண்டி ஏரியின் நீர்மட்டம் 133.60 அடியாக (மொத்த உயரம் 140 அடி) உயர்ந்துள்ளது. சோழவரம் ஏரியில் 56.08 அடியாகவும் (மொத்த உயரம் 64.50 அடி), புழல் ஏரியில் 37.73 அடியாகவும் (மொத்த உயரம் 50.20 அடி), செம்பரம்பாக்கம் ஏரியில் 76.95 அடியாகவும் (மொத்த உயரம் 85.40 அடி) உயர்ந்துள்ளது. இந்த 4 ஏரிகளின் மொத்த நீர்இருப்பு 4,535 மில்லியன் கன அடியாக உள்ளது. கடந்த ஆண்டு இதே நாளில் இந்த அளவு 2,865 மில்லியன் கன அடியாக இருந்தது.
அடுத்த 4 நாட்களுக்கு கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில், அனைத்து ஏரிகளும் விரைவில் நிரம்பும் என தெரிகிறது.