

முருகனுக்கும் பாஜகவுக்கும் என்ன தொடர்பு இருக்கிறது, எங்களிடம் வேல்முருகனே உள்ளார் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அரசியல் பிரச்சாரக் கூட்டத்தில் இன்று திருமாவளவன் பேசும்போது, ''முருகனுக்கும் பாஜகவுக்கும் என்ன தொடர்பு? எங்களிடம் வேல்முருகனே இருக்கிறார். எங்களிடத்தில் வேலும் இருக்கிறது. முருகனும் இருக்கிறார். திமுக தலைவர் கருணாநிதியும், அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவும் இல்லை. இந்நேரத்தை எப்படியாவது பயன்படுத்தி பாஜக காலூன்ற முயன்று வருகிறது.
அதில் ஒன்றுதான் இந்தத் தேர்தல் களம். இதற்கு இடமளிக்கக்கூடிய வாய்ப்பை அதிமுகவும், பாமகவும் தருகின்றன. ரவுடிகளைத் தங்கள் கட்சியில் சேர்த்துக்கொள்ளும் மோடிக்கு, திமுகவையும், விடுதலைச் சிறுத்தைகளையும் விமர்சிக்க எந்தத் தகுதியும் கிடையாது.
ரவுடிகளின் கூடாரமாக இருப்பது பாஜகதான். ரவுடிகள் வெளிப்படையாக பாஜகவில் இணைகிறார்கள். சினிமாவில் மார்க்கெட் இல்லாத நடிகைகளின் கூடாரமாக பாஜக உள்ளது.
சேப்பாக்கத்தில் கூறியதை இங்கேயும் கூறுகிறேன். பாஜகவா? விசிகவா? நேருக்கு நேர் விவாதிக்கத் தயார். இந்த மண் சமூக நீதி மண். இந்த மண் பெரியார் மண்'' என்று திருமாவளவன் பேசினார்.