Last Updated : 31 Mar, 2021 07:07 PM

 

Published : 31 Mar 2021 07:07 PM
Last Updated : 31 Mar 2021 07:07 PM

பிரதமர் மோடியின் பார்வை தமிழகம் மீது திரும்பியுள்ளது: யோகி ஆதித்யநாத்

கோவை ராஜவீதியில் இன்று நடந்த பிரச்சாரக் கூட்டத்தில், கூடியிருந்த தொண்டர்களைப் பார்த்துக் கையசைத்த முதல்வர் யோகி ஆதித்யநாத். அருகில் வேட்பாளர் வானதி சீனிவாசன் | படம்: ஜெ.மனோகரன்.

கோவை

பிரதமர் மோடியின் பார்வை தமிழகத்தின் மீது திரும்பியுள்ளது. தமிழகத்துக்காக பிரதமர் அதிக நிதி ஒதுக்கியுள்ளார் என உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் கோவையில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் பேசினார்.

கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனை ஆதரித்துப் பிரச்சாரம் செய்ய, உத்தரப் பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் இன்று (31-ம் தேதி) கோவை வந்தார்.

ராஜவீதி தேர்முட்டி பகுதியில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் பேசியதாவது:

''பகவான் ஸ்ரீ ராமரின் புண்ணிய பூமியான உத்தரப் பிரதேசத்தில் இருந்து கோவைக்கு வந்துள்ளேன். ஆயிரக்கணக்கான அற்புதமான கலைஞர்கள் ஒன்றுசேர்ந்து, டெக்ஸ்டைல் சிட்டி என்ற கோவையை உருவாக்கியுள்ளனர். பல்வேறு நபர்கள் ஒன்று சேர்ந்து கோவையின் கல்வித் தரத்தை உயர்த்தப் பாடுபட்டுள்ளனர். உத்தரப் பிரதேசத்தில் பகவான் ஸ்ரீ ராமரின் ஆலய நிர்ணயத்துக்காகத் தமிழகத்தில் இருந்து ரூ.120 கோடி நிதி கிடைத்துள்ளது.

நமது இந்த யாத்திரை, பிரதமர் நரேந்திர மோடியின் நல்ல திட்டங்களை, சிறப்பாகக் கொண்டுசென்று சேர்த்துள்ளது. அந்த யாத்திரை இன்று புதிய கோணத்தில் வடிவமுற்று, கோவை மண்ணுக்கு வந்து சேரும். பாதுகாப்புத் துறையின் ‘டிஃபென்ஸ் காரிடார்’ திட்டத்துக்கு பிரதமர் மோடி கோவையைத் தேர்ந்தெடுத்துள்ளார். மேலும், கோவையின் முன்னேற்றத்துக்காகப் பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளார்.

நமது ராணுவ வீரர்களைக் கொன்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்க சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தப்பட்டது. அதில் இடம்பிடித்த தமிழக விங் கமாண்டர் அபிநந்தனை உயிரோடு மீட்டது, பிரதமர் மோடியின் சாதனையாகும். கோவையில் அமைக்கப்படும் ‘டிஃபென்ஸ் காரிடார்’ நமது சுயசார்பு பாரதத்தைப் பறைசாற்றும் வகையில் அமையும். இதன் மூலம் எண்ணற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். பிரதமர் மோடியின் பார்வை தமிழகத்தின் மீது திரும்பியுள்ளது.

பாஜக ஆட்சியமைக்கும்

நாடு முழுவதும் 5 மாநிலங்களில் தேர்தல் நடக்கிறது. இதில் அசாம், மேற்கு வங்கம், கேரள மாநிலங்களில் நான் பிரச்சாரத்துக்குச் சென்றுள்ளேன். இதில் அசாம், மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சியமைக்கும். தமிழகத்தில் அதிமுக கூட்டணி மீண்டும் ஆட்சியமைக்கும். நமது நோக்கம், திட்டம் அனைவருடனும் சேர்ந்து, அனைவருக்குமான வளர்ச்சி என்பதே ஆகும். இதுவே நம் தாரக மந்திரம். தமிழகத்துக்கு அதிக நிதியை பிரதமர் மோடி ஒதுக்கியுள்ளார். கடந்த 6 ஆண்டுகளாக நாட்டு மக்களுக்குப் பல நலத் திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி வழங்கியுள்ளார்.

தமிழகத்தில் அனைவருக்கும் வீடு திட்டம், தூய்மை பாரதம் திட்டத்தில் 54 லட்சம் கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன. நமது அரசு செயல்படுத்தும் திட்டங்கள், பாகுபாடு இல்லாமல் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் செல்ல வேண்டும் என்பதுதான் நம் நோக்கம். வரும் தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணி வெற்றி பெற்றால் ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்படும். இரு மடங்காக நிதி ஒதுக்கப்படும். இக்கூட்டணி மீண்டும் சேவை செய்ய வாய்ப்பு வழங்க வேண்டும்.

ஸ்மார்ட் சிட்டி திட்டம், அம்ருத் திட்டங்களில் கோவை உள்ளிட்ட நகரங்கள் இடம் பெற்றுள்ளன. கோவைக்கு நமது அரசு அதிக முக்கியத்துவம் தருகிறது. மக்கள் முன்னேற்றம், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, பெண்களுக்குப் பாதுகாப்பு ஆகியவையே நமது அரசின் நோக்கமாகும். இதையெல்லாம் கருத்தில் கொண்டு அதிமுக- பாஜக கூட்டணியை வெற்றிபெற வைக்க வேண்டும்''.

இவ்வாறு யோகி ஆதித்யநாத் பேசினார்.

இந்நிகழ்ச்சியில் பாஜக கோவை தெற்கு தொகுதி வேட்பாளர் வானதி சீனிவாசன், மாநிலத் துணைத் தலைவர் ஏ.பி.முருகானந்தம், அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் துணை மேயர் லீலாவதி உண்ணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x