Last Updated : 31 Mar, 2021 05:42 PM

 

Published : 31 Mar 2021 05:42 PM
Last Updated : 31 Mar 2021 05:42 PM

பிரதமர் திரித்துப் பேசுகிறார்; மீனவர்களின் வயிற்றில் அடிக்கிறார்: நாராயணசாமி விமர்சனம்

புதுச்சேரி

புதுச்சேரிக்கு வந்த பிரதமர் அரைத்த மாவையே அரைத்துவிட்டுச் சென்றுள்ளார் என புதுச்சேரியின் முன்னாள் முதல்வர் நாராயணசாமி விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து முன்னாள் முதல்வர் நாராயணசாமி இன்று (மார்ச் 31) கூறியதாவது, ‘‘பிரதமர் மோடி நேற்று தேர்தல் பிரச்சாரத்துக்கு புதுச்சேரி வந்தார். மக்களின் பிரச்சினைகள் ஒன்றுமே அவருடைய பேச்சில் இல்லை. புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து தர வேண்டும். மாநிலத்தின் அனைத்துக் கடன்களையும் ரத்து செய்ய வேண்டும். அதிகப்படியான நிதி கொடுக்க வேண்டும். இதனைப் பற்றி பிரதமர் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. இது சம்பந்தமாக என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி பேசும்போது கூட அதற்கு பிரதமர் பதிலளிக்கவில்லை.

ஆனால், அவர் என்னைப் பற்றி பொய்யான குற்றச்சாட்டுகளைக் கூறியும், நான் ஊழல் செய்துவிட்டதாகவும் தனிப்பட்ட முறையில் விமர்சித்துள்ளார். எங்களுடைய ஆட்சியில் ஊழல் நடந்துள்ளதாகவும் கூறியுள்ளார். நான் காந்தியின் குடும்பத்துக்குச் சேவகம் செய்பவர் என்றும், எனக்குத் தேர்தலில் போட்டியிட சீட்டு வழங்கவில்லை எனவும் பேசியுள்ளார். பிரதமர் விவரம் தெரியாமல் பேசியுள்ளார்.

மத்தியில் பாஜக ஆட்சி இருக்கிறது. நான் ஊழல் செய்திருந்தால் ஏன்? விசாரணை வைக்கவில்லை. பிரதமர் எந்தவித ஆதாரமும் இல்லாமல் பொய்யான குற்றச்சாட்டுகளை என் மீது கூறுகிறார். மழை வெள்ளம் ஏற்பட்ட சமயத்தில் ராகுல் காந்தி புதுச்சேரிக்கு வந்தபோது அவருடைய காலணியைக் கையால் எடுத்துக் கொடுத்தேனே தவிர, அவரது காலில் காலணியைப் போட்டுவிடவில்லை. அதேபோல நான் தவறாக மொழிபெயர்த்தேன் என்பது அப்பட்டமான பொய். அதற்கான விளக்கத்தை நான் அளித்துள்ளேன். இதனைப் பிரதமர் திரித்துப் பேசுகிறார். ரங்கசாமியை முதல்வர் வேட்பாளராக அறிவிப்பார் என்று எதிர்பார்த்தனர். ஆனால் ரங்கசாமிக்கும், என்.ஆர் காங்கிரஸ் கட்சியினருக்கும் மிகப்பெரிய ஏமாற்றத்தை பிரதமர் தந்துள்ளார்.

பல திட்டங்களை அறிவித்து நடைமுறைப்படுத்தாமல் உள்ள மோடி புதுச்சேரிக்கு நிறைய திட்டங்களை நிறைவேற்றுவேன் என்று கூறுகிறார். பிரதமர் சாகர் மாலா திட்டத்தைக் கொண்டுவந்து மீனவர்களின் வயிற்றில் அடிக்கிறார். பிரதமரின் உரையானது புதுச்சேரி மக்களால் ஏற்றுக்கொள்ளக் கூடாத ஒரு உரையாக உள்ளது.

பாஜக தன்னுடைய அதிகார பலம், பணபலத்தை வைத்து அனைவரையும் மிரட்டி மக்கள் மத்தியில் வாக்குகளை வாங்க நினைக்கிறது. பாஜக கூட்டணியில் என்.ஆர். காங்கிரஸ் உள்ளது. என்.ஆர்.காங்கிரஸுக்குப் போடுகின்ற ஒவ்வொரு ஓட்டும் பாஜகவுக்குப் போடும் ஓட்டு. இதனை மக்கள் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும்.

பாஜகவின் பி டீமாகத்தான் என்.ஆர்.காங்கிரஸ் இருந்து வருகிறது. புதுச்சேரியைக் காப்பாற்ற வேண்டுமென்றால், காங்கிரஸ் - திமுக கூட்டணியால் மட்டும்தான் முடியும். என்.ஆர் காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி பேசும்போது கடந்த 5 ஆண்டுகளில் எந்த திட்டத்தையும் நிறைவேற்றவில்லை என்று கூறினார். அவர் கண்களை மூடிக்கொண்டு பேசுகிறார். நாங்கள் எந்தெந்த திட்டங்களை நிறைவேற்றியுள்ளோம் என்பதைப் பட்டியலிட்டுக் கொடுத்துள்ளேன்.

பிரதமர் எதற்காக புதுச்சேரிக்கு வந்தார். என்ன சாதித்தார் என்பது மக்கள் மத்தியில் இருக்கின்ற மிகப்பெரிய கேள்வி. இங்கு வந்த அவர் எந்த திட்டத்தையும் அறிவிக்காமல் அரைத்த மாவையே அரைத்துவிட்டுச் சென்றுள்ளார். புதுச்சேரியில் ஆட்சியைப் பிடிக்க பாஜக துடித்துக் கொண்டிருக்கிறது. இதற்காக வருமான வரித்துறையை ஏவி விடுகின்றனர். மக்கள் மத்தியில் தவறான செயல்களைச் செய்து கவர வேண்டும் என்று நினைக்கின்றனர். பாஜகவின் வேலைகள் மக்களுக்கு நன்றாகத் தெரியும்.’’

இவ்வாறு நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x