Last Updated : 31 Mar, 2021 04:40 PM

 

Published : 31 Mar 2021 04:40 PM
Last Updated : 31 Mar 2021 04:40 PM

அதிமுக பிரச்சாரம் மக்களிடம் எடுபடாததால் டெல்லியில் இருந்து ஆட்களை அழைத்து வருகிறார்கள்: கனிமொழி விமர்சனம்

தமிழகத்தைத் தமிழர்கள் தமிழகத்தில் இருந்து ஆள வேண்டும் என நினைத்துப் பொதுமக்கள் வாக்களிக்க வேண்டும் எனக் கனிமொழி தெரிவித்துள்ளார்.

ராமநாதபுரம் சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளர் காதர்பாட்சா முத்து ராமலிங்கத்திற்கு ஆதரவாக திருப்புல்லாணியில் திமுக மாநில மகளிரணிச் செயலாளரும், எம்.பி.யுமான கனிமொழி இன்று பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது அவர் பேசியதாவது:

''தமிழகத்தில் அதிமுக பிரச்சாரம் மக்களிடம் எடுபடவில்லை என்றுதான் டெல்லியில் இருந்து தற்போது பிரச்சாரத்திற்கு ஆட்களை அழைத்து வருகிறார்கள். தாராபுரம் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியபோது, அனைத்துத் தொகுதிகளிலும் தான் நிற்பதாக நினைத்து அனைவரும் வாக்களியுங்கள் எனக் கூறியுள்ளார். பாஜக ஆட்சி, தமிழ் மொழிக்கு, தமிழ் அடையாளங்களுக்கு, விவசாயிகளுக்கு, தொழிலாளர்களுக்கு, மருத்துவ மாணவர்களுக்கு எதிரானது.

தமிழர்கள் மீது அக்கறை இருப்பது போலப் பிரதமர் பேசினால் அதற்கு மயங்கத் தமிழர்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லை. காவல் நிலையத்தில் தேடப்படும் குற்றவாளிகள் பட்டியலில் உள்ள 20 குற்றவாளிகளைத் தேடித்தேடி பாஜகவில் சேர்த்துள்ளனர்.

புயல் வெள்ள பாதிப்புக்குத் தமிழக அரசு ரூ.1.20 லட்சம் கோடி கேட்டால் வெறும் ரூ.5 ஆயிரம் கோடி கொடுத்தார்கள். தமிழகத்திற்கு அள்ளிக் கொடுக்க வேண்டாம், கிள்ளிக் கொடுக்கக்கூட மனமில்லாதது மத்திய அரசு. மதுரையில் அடிக்கல் நாட்டிய எய்ம்ஸ் அப்படியே உள்ளது. அப்பல்லோவில் ஒரு கோடி ரூபாய்க்கு ஒரு இட்லியை ஜெயலலிதா சாப்பிட்டது போல, எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ரூ.12 கோடிக்கு ஒரு செங்கல்லை நட்டுள்ளனர். இலங்கைக் கடற்படையால் பாதிக்கப்படும் மீனவர் பிரச்சினைக்கு, திமுக ஆட்சி வந்ததும் மத்திய அரசிடம் அழுத்தம் கொடுத்து நிரந்தரத் தீர்வு காணப்படும். தமிழகத்தில் காலியாக உள்ள 3.40 லட்சம் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் பாதாளச் சாக்கடைத் திட்டம், முழுமையான கூட்டுக் குடிநீர்த் திட்டம் ஆகியவை செயல்படுத்தப்படும். மீனவர்களுக்கு முழுப் பாதுகாப்பு வழங்கப்படும். தென்னை, பனை ஆகிய தொழில்களை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்தைத் தமிழர்கள் தமிழகத்தில் இருந்து ஆள வேண்டும் என நினைத்து வாக்களியுங்கள்''.

இவ்வாறு கனிமொழி எம்.பி. பேசினார்.

அப்போது நவாஸ்கனி எம்.பி., முன்னாள் எம்.பி. பவானி ராஜேந்திரன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x