Published : 31 Mar 2021 03:15 AM
Last Updated : 31 Mar 2021 03:15 AM

சென்னையில் கரோனா பரவலை கட்டுப்படுத்த ஏப்.6-க்கு பிறகு கடும் நடவடிக்கை: மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ் தகவல்

சென்னையில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த ஏப்.6-ம் தேதிக்குப் பிறகு நடவடிக்கைகளை கடுமையாக்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

சென்னையில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 5 ஆயிரத்து 895 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல்கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2 லட்சத்து 48 ஆயிரத்து 22 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை சிகிச்சை பலனின்றி 4 ஆயிரத்து 236 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் சென்னையில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்தஎடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

வழிபாட்டு தலங்கள், உணவகங்கள், அரசியல் கட்சிகளின் பிரச்சாரக் கூட்டங்கள் போன்றவற்றுக்கு சென்றால் கரோனா தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே மக்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து முகக் கவசம் அணிவதை தொடர்ந்துகடைபிடிக்க வேண்டும்.

தடுப்பு திட்டங்கள் தயார்

அதேநேரம் கரோனா தடுப்பூசி போடும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. இதுவரை 7 லட்சத்து50 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களின் எண்ணிக்கையை உயர்த்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள முன்வர வேண்டும்.

தேர்தலுக்கிடையே கரோனா தடுப்பு பணிகளை மேற்கொள்வது பெரும் சவாலாக உள்ளது. ஏப்.6-ம்தேதிக்குப் பிறகு, கரோனா பரவல்தடுப்பு நடவடிக்கைகளை கடுமையாக்குவதற்கான திட்டங்கள் தயார் நிலையில் உள்ளன.

சென்னையில் உள்ள 39 ஆயிரம் தெருக்களில் 358 தெருக்களில் தொற்று அதிகமாக உள்ளது. அவை தற்போது கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக உள்ளன. சென்னையில் தொற்று அதிகரித்தாலும், தேவையான படுக்கை வசதிகள் தயார் நிலையில் உள்ளன.மேலும், அத்திப்பட்டு பகுதியில் புதிதாக 6 ஆயிரம் படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x