

எ.வ.வேலு மற்றும் குடும்ப உறுப்பினர்களின் வீடுகளில் நடத்தப்பட்ட சோதனையில் கணக்கில் வராத பணம் ரூ.25 கோடி கைப்பற்றப்பட்டுள்ளது. இதுகுறித்து விளக்கம் அளிக்குமாறு அவர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாக வருமான வரித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
திருவண்ணாமலை தொகுதி திமுக வேட்பாளரும், முன்னாள் அமைச்சரு மான எ.வ.வேலு வீட்டில் வருமான வரித் துறையினர் கடந்த 25-ம் தேதி சோதனை நடத்தினர். அவரது வீடு, கல்லூரி, அறக்கட்டளை, குடும்ப உறுப்பினர்களின் வீடுகள் உட்பட 18 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.
வாக்காளர்களுக்கு விநியோகிக்க பணம் பதுக்கி வைத்திருப்பதாக வந்த தகவலின் பேரில் சோதனை நடத்தப்பட்டதாக வருமான வரித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
திருவண்ணாமலை மாவட்ட திமுக துணை செயலாளராக இருந்த சாவல்பூண்டி சுந்தரேசன் என்பவர் பேசியதாக ஒரு ஆடியோ வெளியானது. “எ.வ.வேலுவுக்கு 8 கல்வி நிறுவனங் கள், தமிழகத்தில் 6 ஆயிரம் ஏக்கர் நிலம், ஸ்பின்னிங் மில், கிரானைட் கம்பெனி உள்ளன. கரூரில் ரூ.500 கோடி முதலீட்டில் ஃபைனான்ஸ் செய்கிறார். டிவி சீரியல் எடுக்கிறார். திரைப்படங் களுக்கு ஃபைனான்ஸ் செய்து, பட விநியோகமும் செய்கிறார்” என்று அதில் கூறப்பட்டது. இதுதான் சோதனைக்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.
இதற்கிடையில், திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 8 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் எ.வ.வேலுவை மையமாக கொண்டு பணப் பட்டுவாடா நடப்பதாக புகார் எழுந்தது. இதுபற்றிய தகவலும் வருமான வரித் துறைக்கு சென்றுள்ளது. இதுவும் சோதனைக்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.
எ.வ.வேலு, குடும்ப உறுப்பினர்களின் வீடுகளில் வருமான வரித் துறையினர் நடத்திய சோதனையில் ஏராளமான ஆவணங்கள், ரொக்கப் பணம் கைப்பற்றப்பட்டுள்ளன. அவற்றை ஆய்வு செய்ததில் கணக்கில் காட்டப்படாத பணம் ரூ.25 கோடி இருப்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்து விளக்கம் அளிக்குமாறு எ.வ.வேலு, குடும்ப உறுப்பினர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது என்று வருமான வரித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.