தமிழகத்தில் கனமழை நீடிக்க வாய்ப்பு: மழை பலி எண்ணிக்கை 122 ஆக அதிகரிப்பு

தமிழகத்தில் கனமழை நீடிக்க வாய்ப்பு: மழை பலி எண்ணிக்கை 122 ஆக அதிகரிப்பு
Updated on
1 min read

சென்னை நகரம் மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும், ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை மைய இயக்குநர் ரமணன் தெரிவித்தார்.

தமிழகத்தின் பல பகுதிகள் மற்றும் புதுச்சேரியில் ஞாயிறன்று தொடர்ந்து மழை பெய்தது. வங்காள விரிகுடாவில் ஏற்பட்டிருக்கும் காற்றழுத்த தாழ்வு நிலை கன்னியாகுமரி கடலுக்கு அருகில் நகர்ந்திருப்பதால் அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னையில் கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்ததில் பலியான 27 வயது நபர் உட்பட பலி எண்ணிக்கை 122 ஆக அதிகரித்துள்ளது.

“காற்றழுத்த தாழ்வு நிலை மேற்கு நோக்கி நகர்ந்து கன்னியாகுமரி அருகே உள்ளது, இதனால் கடலோர மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் கனத்த மழை முதல் மிக கனத்த மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது” என்று வானிலை மைய இயக்குநர் ரமணன் தெரிவித்தார்.

சென்னை நகரைப் பொறுத்தவரை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும், ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றார் அவர்.

புதுக்கோட்டை மாவட்டம் இரும்பூரில் கடந்த 24 மணி நேரத்தில் 9 செமீ மழை பதிவாகியுள்ளது. புதுச்சேரியில் 7செமீ மழை பதிவானது.

சென்னையை அடுத்த ஒட்டேரியில் பாதி சேதமடைந்த கட்டிடம் ஒன்று இடிந்து அருகில் உள்ள கட்டிடம் மீது விழுந்ததில் ஒருவர் பலியாக பெண் ஒருவர் காயமடைந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.

பருவநிலை வேகத்தின் காரணமாக கடந்த 10 நாட்களாக விடுமுறை அறிவிக்கப்பட்ட பள்ளிக்கூடங்கள் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் நாளை திறக்க ஆயத்தமாகி வருகின்றன.

ஆனால், புதுச்சேரியில் நாளையும் மழை நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மழை-வெள்ள பாதிப்பு பகுதிகளை பார்வையிட்ட நிர்மலா சீதாராமன்

பாஜக தலைவரும், மத்திய வர்த்தகத் துறை அமைச்சருமான நிர்மலா சீதாராமன் தமிழகத்தின் மழை பாதிப்பு பகுதிகளை பார்வையிட்டார். இவர் மாநில அரசுக்கு இது குறித்து கடிதம் எழுதுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

“தொழிற்கூடங்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டது வருத்தம் அளிக்கிறது. நிச்சயம், நான் இதனை மத்திய அரசின் பார்வைக்கு எடுத்துச் செல்வேன். முதலில் தொழிற்துறை அமைச்சர் பார்வைக்கு எடுத்துச் செல்வேன். பிறகு எனக்கு கிடைத்த, நான் திரட்டிய தகவல்களின் அடிப்படையில் விளக்கமாக தமிழக முதல்வருக்கும் கடிதம் எழுதுவேன்.

பெரிய அளவில் நடவடிக்கை அவசியம் என்று படுகிறது. வெள்ள நீர் சூழ்ந்த தொழிற்கூடங்கள் மீண்டும் சகஜமாக இயங்குவதை உறுதி செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்” என்றார்.

திருநெல்வேலி சென்ற தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் இளங்கோவன், முதல்வர் ஜெயலலிதா வெள்ளம் பாதித்த பகுதிகளை நேரில் சென்று பார்வையிட போதிய கால அவகாசம் எடுத்துக் கொள்ளவில்லை என்று சாடினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in