

கிருஷ்ணகிரி மாவட்டம் தளி சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் ராமச்சந்திரனை ஆதரித்து கெலமங்கலத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் டி.ராஜா பேசியதாவது: மோடி தலைமையிலான மத்திய அரசின் வீழ்ச்சிக்கு தமிழக தேர்தல் ஒரு தொடக்கமாக இருக்கப் போகிறது. அதனால்தான் பாஜக தலைவர்களான மோடி, அமித்ஷா, ராஜ்நாத்சிங் உள்ளிட்டோர் பதற்றத்துக்கும், விரக்திக்கும் ஆளாகியிருப்பதால் தமிழகத்தில் தொடர்ந்து பிரச்சாரம் செய்ய வருகின்றனர்.
பாஜக போட்டியிடும் தளி தொகுதி உட்பட அனைத்து தொகுதிகளிலும் பாஜக அதிகார துஷ்பிரயோகம் செய்து வருகிறது. பாஜகவினர் பண பலத்தை வைத்துக் கொண்டு தேர்தல் முறையை தங்களுக்கு சாதகமாக்க பார்க்கிறார்கள். ஆனால் மக்கள் இந்த அதிகார பலத்தை, பணபலத்தை முறியடித்துஜனநாயகத்துக்கு வெற்றியைத் தேடித் தர இன்று விழிப்போடு இருக்கிறார்கள்.
மாநில உரிமைகளை, நலன்களைப் புறக்கணித்த, காப்பாற்ற தவறிவிட்ட அதிமுக ஆட்சி தொடரவே கூடாது. அதேபோல மதவெறி,பாசிச கொள்கையை முன்வைத்து அரசியல் நடத்துகின்ற பாஜக தமிழகத்தில் காலுன்றி விடக்கூடாது. மக்கள் மிகுந்த புரிதலோடும் விழிப்புணர்வோடும் இருக்கிறார்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.