

திமுக ஆட்சி அமைந்தால் யாரும் தொழில் செய்யவே முடியாது என தருமபுரி தேர்தல் பிரச்சாரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார்.
தருமபுரி மாவட்டத்தில் அதிமுககூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அரூர் தொகுதி சம்பத்குமார் (அதிமுக), பாப்பிரெட்டிப்பட்டி தொகுதி கோவிந்தசாமி (அதிமுக), தருமபுரி வெங்கடேஸ்வரன் (பாமக), பென்னாகரம் தொகுதி வேட்பாளர் ஜி.கே.மணி (பாமக), பாலக்கோடு தொகுதிகே.பி.அன்பழகன் (அதிமுக) ஆகியோரை ஆதரித்து, தருமபுரி 4 சாலை சந்திப்பு, பென்னாகரம், பாலக்கோடு ஆகிய இடங்களில் வாகனத்தில் இருந்தபடி பாமக நிறுவனர் ராமதாஸ் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:
திமுக-வைச் சேர்ந்த முன்னாள்அமைச்சர் ஆ.ராசா தமிழக முதல்வர் பழனிசாமியின் தாயாரை இழிவுபடுத்திப் பேசியது அருவருக்கத் தக்கது. அவரது பேச்சை பெண்கள்மட்டுமல்ல, யாருமே மறக்கக் கூடாது. கண்ணகி, ஆண்டாள், திரவுபதி ஆகியோரை தெய்வங்களாக வணங்கும் நாடு இது. பெண்களுக்கு முன்னுரிமை கொடுத்து வரும் இந்த மண்ணில் இதுபோன்ற பேச்சு வன்மையாக கண்டித்தக்கது. திமுக ஆட்சி அமைந்தால் தொழில் செய்யவே இயலாது. மக்களின் சொத்துகளை திமுக-வினர் அபகரிப்பர்.
தருமபுரி மாவட்டத்துக்கு ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தைகொண்டு வந்தது திமுக-வாக இருக்கலாம். ஆனால், அத்திட்டத்தை செயல்படுத்தியதற்கு பாமகதான் காரணம். பின்தங்கிய மாவட்டமான தருமபுரி மாவட்டம் கோவை, திருப்பூர் மாவட்டங்களைப்போல தொழில் வளம் பெற வேண்டும். இதற்கான திட்டங்கள் பாமக வசம் உள்ளது. நாம் முன்வைக்கும் கோரிக்கைகளை நிறைவேற்றித்தர தமிழக முதல்வர் தயாராக உள்ளார்.
இவ்வாறு அவர் பேசினார்.