Published : 31 Mar 2021 03:16 AM
Last Updated : 31 Mar 2021 03:16 AM

படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு முகாம் நடத்த ஏற்பாடு: செங்கல்பட்டு அதிமுக வேட்பாளர் கஜேந்திரன் உறுதி

படித்த இளைஞர்களுக்கு வேலை கிடைக்க 6 மாதங்களுக்கு ஒருமுறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படும் என செங்கல்பட்டு அதிமுக வேட்பாளர் கஜேந்திரன் வாக்குறுதி அளித்தார்.

செங்கல்பட்டு தொகுதி அதிமுக வேட்பாளர் கஜேந்திரன் நகர்ப்புறங்களிலும், கிராமப்புறங்களிலும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். செங்கல்பட்டு சுற்று வட்டார கிராமப்புற பகுதியில் பல்வேறு இடங்களில் வாக்காளர்களை சந்தித்த அவர், நகரில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

தொடர்ந்து கஜேந்திரன் தெரிவித்ததாவது: கிராமப்புறங்களிலும் நகர்ப்புறங்களிலும் படித்த இளைஞர்கள் வேலை கிடைக்காமல் தவிக்கும் நிலை உள்ளது. படித்த இளைஞர்கள் போட்டித் தேர்வுகளில் கலந்துகொள்ள போட்டித் தேர்வு பயிற்சி மையம் முறையாக செயல்படாத நிலை உள்ளது.

எனவே, போட்டித் தேர்வு பயிற்சி மையம் முறையாக செயல்படவும் அதன் மூலம் படித்த இளைஞர்கள் போட்டித் தேர்வில் கலந்து கொண்டு வேலை வாய்ப்பு பெறவும் தேவையான ஏற்பாடுகளை செய்வேன்.

மேலும் 6 மாத இடைவெளியில் தனியார் நிறுவனங்களை அழைத்து வந்து வேலைவாய்ப்பு முகாம் நடத்தி படித்த இளைஞர்களுக்கு, அவர்களது கல்வித் தகுதிக்கேற்ப வேலை கிடைக்க உரிய நடவடிக்கை எடுப்பேன். படித்த இளைஞர்கள் பலர் தொழில்முனைவோராக ஆவதற்கு விருப்பம் இருந்த போதிலும் அவர்களால் பல்வேறு காரணங்களால் அதை மேற்கொள்ள முடியாத நிலை உள்ளது.

தொழில் தொடங்க இருப்பவர்களுக்கு உரிய ஆலோசனைகளை வழங்கி, மாவட்ட தொழில் மையம் மூலம் தொழில் தொடங்க உதவி கிடைக்க நடவடிக்கை எடுப்பேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

செங்கல்பட்டு திமுக வேட்பாளர் வரலட்சுமி நேற்று மறைமலைநகர் நகராட்சிக்கு உட்பட்ட 21 வார்டுகளில் பிரச்சாரம் மேற்கொண்டார். செங்கல்பட்டு அமமுக வேட்பாளர் சதீஷ்குமார் தொகுதிக்கு உட்பட்ட சிங்கப்பெருமாள் கோவில் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் வாக்கு சேகரித்தார்.

இதேபோல் வில்லியம்பாக்கம், ஆத்தூர், திம்மாவரம், தெள்ளிமேடு உள்ளிட்ட பகுதிகளில் இந்திய ஜனநாயக கட்சியின் செங்கல்பட்டு சட்டப்பேரவைத் தொகுதி வேட்பாளர் முத்தமிழ்செல்வன் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார்.

அதில் வில்லியம்பாக்கம் ஊராட்சி பகுதிகளில் அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்துதருவேன் என உறுதி கூறினார். பின் அவரது ஆதரவாளர்கள், வேட்பாளருக்கு 2 புறாக்கள் கொடுத்து பறக்கவிட்டு பிரச்சாரத்தை தொடர்ந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x