வெற்றி பெறுவோம் என நம்பிக்கை இருந்தால் தபால் வாக்குகளுக்கு திமுகவினர் பணம் கொடுப்பது ஏன்? - டி.டி.வி.தினகரன் பேச்சு

திருப்பத்தூரில் அத்தொகுதி அமமுக வேட்பாளர் கே.கே.உமாதேவனை ஆதரித்துப் பிரச்சாரம் செய்த அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன்.
திருப்பத்தூரில் அத்தொகுதி அமமுக வேட்பாளர் கே.கே.உமாதேவனை ஆதரித்துப் பிரச்சாரம் செய்த அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன்.
Updated on
1 min read

தேர்தல் தோல்வி பயத்தால் தபால் வாக்குக்கு திமுகவினர் பணம் கொடுக்கின்றனர் என அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் தெரிவித்தார்.

சிவகங்கை மாவட்டத்தில் அமமுக வேட்பாளர்கள் கே.கே.உமாதேவன் (திருப்பத்தூர்) தேவகோட்டையில் தேர்போகி பாண்டி (காரைக்குடி), காளையார் கோவிலில் அன்பரசன் (சிவ கங்கை), இளையான்குடியில் மாரியப்பன்கென்னடி (மானா மதுரை) ஆகியோரை ஆதரித்துப் பிரச்சாரம் செய்தார்.

அப்போது அவர் பேசியதாவது: தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்க திமுக தவியாய் தவிக்கிறது. அனைத்துத் தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் எனக்கூறும் திமுகவினர், தபால் வாக்குகளுக்கு காவலர்களுக்கு ரூ.2,000 கொடுத்துள்ளனர். தோல்வி பயத்தால்தான் திமுகவினர் பணம் கொடுக்கின்றனர்.

ஆளுங்கட்சி தலைமையிலான கூட்டணி, பணத்தை மட்டும் நம்பியே தேர்தலைச் சந்திக்கிறது. துரோகி என்று சொன்னதற்கு என் மீது வழக்குப் பதிவு செய்தனர். சட்ட அமைச்சர் சண்முகத்தை நிதானமாகப் பேசுங்கள் என்று கூறியதைத் தவறாகப் புரிந்து கொண்டு என் மீது வழக்குப் பதிந்துள்ளனர். வழக்கு விசாரணைக்கு வரும்போது புகார் கொடுத்தவர்கள் எங்கு இருப்பார்கள் என்று யாருக்குத் தெரியும்.

ஆறு, ஏரி குளங்களைத் தூர்வாரினார்களோ? இல்லையோ? தமிழக கஜானாவை காலி செய்து விட்டனர். திமுகவை நம்பியவர்கள் தெருவில்தான் நிற்க வேண்டும்.

தப்பித்தவறி ஸ்டாலின் முதல்வரானால் கஜானாவில் ஒன்றுமில்லாததால் பொதுமக்கள் சொத்துகளைத்தான் எடுப்பார்கள். பத்து ஆண்டுகளாக ஆட்சியில் இல்லை. மக் களைச் சுரண்டுவதற்காகக் காத்திருக்கின்றனர். நீட் தேர்வைக் கொண்டு வந்தது திமுகதான். சிட்டுக்குருவியைப் பாதுகாக்கச் சொல்லும் பிரதமர் தமிழக மக்களையும் பாதுகாக்க வேண்டும்.

தமிழக மக்களுக்குத் துரோகம் விளைவித்த ஆட்சியை அகற்ற வேண்டும். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் காரைக்குடியை மாநகராட்சியாகவும், தனி மாவட்டமாகவும் மாற்றுவோம், என்று பேசினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in