

புதுச்சேரியில் மாணவிகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய வழக்கில் தொடர்புடைய போலீஸார் மீது கடும் நடவடிக்கை எடுக்கப் படும் என்றும், அவர்கள் தண்டிக்கப் படுவார்கள் என்றும் டிஜிபி காமராஜ் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை கூறியது:
புதுச்சேரி அருகே உள்ள தவளக்குப்பம் பகுதியில் மாணவி களை பாலியல் தொழிலில் ஈடுபடுத் தியது தொடர்பான வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றச் சம்பவங்களில் ஈடுபடுவோர் மீது இந்திய தண்டனைச் சட்டம் மட்டுமன்றி மிகக்கடுமையான பாக்சோ போன்ற குழந்தைகளுக்கு எதிரான பாலியல் தொந்தரவு தடுப்புச் சட்டமும் பிரயோகம் செய்யப்படும். அந்த சட்டத்தின் கீழ்தான் கைதான 5 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தவளக்குப்பத்தில் மாணவிகளை பாலியல் பலாத்காரம் செய்தவர்கள் தொடர்பாக தீவிர விசாரணை நடந்து வருகிறது. அவர்களும் கைது செய்யப்படுவார்கள். இந்த சம்பவத்தில் புதுச்சேரியை சேர்ந்த போலீஸார் சிலருக்கும் தொடர்பு உள்ளதாக புகார்கள் வந்துள்ளன. அவர்கள் மீது விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும். போலீஸார் தவறு செய்தால் சட்டத்தின் முன் நிறுத்துமாறு போலீஸ் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளேன்.
பெண்களுக்கு மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க அனைத்து காவல் நிலையங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதில் உச்ச நீதிமன்ற வழிகாட்டு நெறிகள் தவறாமல் பின்பற்றப்படும். மேற்கண்ட வழக்குகளில் போலீஸார் செய்ய வேண்டியவை குறித்து அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளன என்றார் டிஜிபி காமராஜ்.