பிரதமர் மோடியின் பிரச்சார பொதுக்கூட்டத்துக்காக மதுரையில் போக்குவரத்தை மாற்றிவிடுவதால் நெரிசல் அபாயம்: மாநகர் காவல்துறை மாற்று ஏற்பாடு செய்யுமா?

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

மதுரையில் ஏப்.2-ல் பிரதமர் பங்கேற்கும் பிரச்சாரப் பொதுக் கூட்டத்துக்காக ‘ரிங்’ ரோட்டில் செல்லும் வாகனங்களைத் திருப்பிவிட்டால் நகரின் போக்குவரத்து முடங்கும் அபாயம் உள்ளது. அதனால், முன்கூட்டியே திட்டமிட்டு வாகனங்களைத் திருப்பிவிட மாற்று ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

பிரதமர் மோடி அதிமுக- பாஜக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்துப் பிரச்சாரம் செய்ய மதுரைக்கு ஏப்.2-ல் வருகிறார். அன்று காலை 10 மணியளவில் ‘ரிங்’ ரோடு அம்மா திடலில் பிரச்சாரக் கூட்டத்தில் பேசுகிறார்.

முதல்வர் கே.பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர். முதல்வர் உள்ளிட்ட மற்ற கட்சித் தலைவர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகள் இதே அம்மா திடல் அல்லது அதன் அருகே நடந்தால் தென் மாவட்டங்களில் இருந்து ‘ரிங்’ ரோடு வரும் வாகனங்களும், மதுரையில் இருந்து தென் மாவட்டங்களுக்குச் செல்லும் வாகனங்களும் மாட்டுத்தாவணி பூ மார்க்கெட், சென்ட்ரல் மார்க்கெட், லேக்வியூ சாலை, மேலமடை, அண்ணா நகர், தெப்பக்குளம், விரகனூர் சந்திப்பு வழியாக திருப்பி விடப்படுகின்றன.

இந்தச் சாலை முழுக்க நகர் பகுதியில் இருப்பதால் வாகனங்களைத் திருப்பி விடும்போது வைகை ஆற்றின் வடகரை நகர் பகுதி முழுவதும் நெரிசல் ஏற்பட்டு ஒட்டுமொத்த போக்குவரத்தும் முடங்குகிறது. வாகன ஓட்டுநர்கள் இந்த நாட்களில் நகரச்சாலைகளைக் கடக்க முடியாமல் சிரமப்படுகின்றனர்.

இரண்டாம் கட்டத் தலைவர்கள் ‘ரிங்’ ரோடு நிகழ்ச்சிகளுக்கு வந் தாலே, மதுரை நகர் பகுதியில் நெரிசல் ஏற்படும்நிலையில் பிரதமர் மோடி, முதல்வர் துணை முதல்வர் உள்ளிட்டோரும் ஏப்.2 பொதுக்கூட்டத்துக்கு வருவதால் நகர் பகுதியில் ஒட்டுமொத்த போக்குவரத்தும் முடங்கும் அபாயம் உள்ளது. அதனால், காவல்துறை உயர் அதிகாரிகள் முன்கூட்டியே திட்டமிட்டு பிரதமர் மோடி பங்கேற்கும் நிகழ்ச்சிக்காக நகரப் போக்குவரத்து முடங்காதவாறு போக்குவரத்தை மாற்றிவிடுவதில் முழுக் கவனம் செலுத்த வேண்டும் என்று பொதுமக்கள், வாகன ஓட் டுநர்கள் எதிர்பார்க்கின்றனர்.

வழக்கம்போல் அதிகாரிகள் கோட்டைவிட்டால் ஏப்.2-ல் மதுரை நகர்ப் பகுதியில் வாகன நெரிசல் ஏற்பட்டு போக்குவரத்தே முடங்கும் நிலை உருவாகும் என வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in