தாமதித்த அதிமுக; முந்திக்கொண்ட பாஜக - அரசு விழா அறிவிப்பால் மீனவர்களிடம் வரவேற்பு

தாமதித்த அதிமுக; முந்திக்கொண்ட பாஜக - அரசு விழா அறிவிப்பால் மீனவர்களிடம் வரவேற்பு
Updated on
1 min read

தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் மீனவர் தினத்தை அரசு விழாவாகக் கொண்டாட வேண்டும் என, மீனவப் பிரதிநிதிகளின் கோரிக்கை கிடப்பில் கிடக்கும் நிலையில், இந்த ஆண்டு முதல் மீனவர் தினத்தை அரசு விழாவாக அறிவித்து கொண்டாடச் செய்தது மத்திய அரசு. இதனால் பாஜகவுக்கு மீனவர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளது.

கடந்த 1998-ம் ஆண்டு நவம்பர் மாதம் 21-ம் தேதியை மீனவர் தினமாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்தது. இவ்விழாவை மத்திய, மாநில அரசுகள் அரசு விழாவாக கொண்டாட வேண்டும் என மீனவப் பிரதிநிதிகள் 20 ஆண்டுகளுக்கும் மேலாக கோரி வருகின்றனர். தமிழகத்தில் மீன் வளத்துறை மூலமாக இக்கோரிக்கை அரசுக்கு அனுப்பப்பட்டது.

மத்திய அரசு அறிவிப்பு

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு அமைந்ததும், மீனவ பிரதிநிதிகளின் சார்பில் இதே கோரிக்கை வைக்கப்பட்டது. நடப்பு ஆண்டில் மீனவர் தினத்தை அரசு விழாவாக மத்திய அரசு கொண்டாடியது. இது மீனவர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இதுகுறித்து மீனவர் சங்க பிரதிநிதி ஒருவர் கூறும்போது, “மத்தியில் மீனவர்களுக்கு தனி அமைச்சகம் இல்லை. வேளா ண்மைத் துறையின் கீழ் தான் மீன் வளத்துறை உள்ளது. இருந்தும் மீனவர்களின் கோரிக்கையை ஏற்று உடனடியாக அரசு விழாவாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் தமிழகத்தில் மீன் வளத்துறை தனி அமைச்சரின் கீழ் செயல்பட்டாலும் எங்களின் இந்த கோரிக்கை சட்டை செய்யப்படாமல் இருந்தது” என்றார்.

தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் ஒன்று கன்னியாகுமரி. இங்கு பாஜக வலுவாக உள்ளது. குளச்சல் - இணையம் வர்த்தகத் துறைமுகத் திட்டத்துக்கு மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்து தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். இப்போது மீனவர் தின விழா, அரசு விழாவாக நடத்தப்பட்டது பாஜகவுக்கு ஆறுதல் அளித்துள்ளது.

நாகர்கோவிலில் நேற்று நடைபெற்ற மீனவர் தினக் கூட்டத்திலும், இதற்காக மீனவ அமைப்புகளின் பிரதிநிதிகள் மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்திருந்தனர். இருந்தும் குமரியில் மீனவர்கள் வாக்குகள் துறைமுகத்தின் போக்கில் உள்ளது என்பதே இப்போதைய நிலை.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in