

மாநில அந்தஸ்து, புதுவைக்கு நிதி போதவில்லை என்று பொதுக்கூட்ட மேடையில் பிரதமர் மோடி முன்பாக என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி வலியுறுத்தினார்.
புதுச்சேரி ஏஎப்டி திடலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி முன்பாக, என்ஆர் காங்., தலைவர் ரங்கசாமி பேசியதாவது:
கடந்த 2011ல் புதிதாக கட்சி தொடங்கி இதே மைதானத்தில் மாநாடு நடத்தி வென்று ஆட்சியமைத்து நினைவுக்கு வருகிறது. அந்த வெற்றி இப்போதும் கிடைக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது.
கடந்த முறை காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. அது இருண்ட ஆட்சி. புதுவையை 15 ஆண்டுகள் பின்னுக்கு தள்ளிவிட்ட ஆட்சியை நாராயணசாமி நடத்தினார்.
கடந்த முறை புதுவை வந்த போது நாராயணசாமி மட்டும் தனியாக இருப்பார் என்று பிரதமர் கூறினார். அந்த நிலைமையில்தான் நாராயணசாமி இப்போது இருக்கிறார். தேர்தலில் போட்டியிட முடியாத நிலையில் நாராயணசாமி இருக்கிறார். ஐந்து ஆண்டு ஆட்சியில் செய்த சாதனை ஏதேனும் ஒன்றை கூட நாராயணசாமியால் சொல்ல முடியாது.
தேர்தலின் போது ஆளுங்கட்சியில் இருந்தோர் தான் செய்த திட்டங்களை தேர்தல் சமயத்தில் எடுத்து சொல்வார்கள். ஒரு வாக்குறுதியை கூட அவரால் நிறைவேற்ற முடியவில்லை. பழைய திட்டங்களையும் முடக்கியதுதான் நாராயணசாமியின் வேலை.
குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை கொடுப்போம் என்றார். இதை கூறும்போதே சிந்தித்துக் கூறி இருக்க வேண்டும். புதுவையில் 3.27 லட்சம் குடும்பங்கள் உள்ளது. எப்படி அனைத்து குடும்பங்களுக்கும் வேலை கொடுக்க முடியும்.
10 பேருக்கு கூட இவர்களால் வேலை கொடுக்க முடியவில்லை. இளைஞர்கள் படித்துவிட்டு வேலையில்லாமல் சிரமத்திற்குள்ளாகி உள்ளனர். ஒருவருக்கு கூட வேலை கொடுக்கவில்லை.
முதியோர் உதவித்தொகையை ஐந்து ரூபாய் கூட உயர்த்தி தராதது கடந்த அரசு.
புதுவையில் கடந்த 5 ஆண்டுகளில் எந்த பகுதியும் வளர்ச்சி அடையவில்லை. அப்படிப்பட்ட நிலையில்தான் கடந்த ஆட்சி நடந்தது. நாராயணசாமி தேர்தலில் நிற்கவில்லை. அவர் கொல்லைப்புறம் வழியாக வருபவர். அவரால் தேர்தலில் நிற்க முடியாது. திட்டங்களை முடக்கிய காங்கிரஸ் மறுபடியும் தேர்தலை சந்திக்க வருகிறது.
முன்னாள் முதல்வர் நாராயணசாமி அடிக்கடி மாநில அந்தஸ்து வேண்டும் என்கிறார். நாங்கள் பல ஆண்டுகளாக மாநில அந்தஸ்து கேட்டுக் கொண்டிருக்கிறோம். பிரதமரை சந்தித்த போதும் கூட கேட்டுள்ளேன்.
அத்துடன் எங்களுக்கு நிதி போதாது. கொடையை உயர்த்தி கொடுங்கள். அப்போதுதான் புதுச்சேரி வளர்ச்சி பெற முடியும் என்று முதலில் சந்தித்தபோது பிரதமரிடம் கேட்டிருந்தேன்.
இப்போது மத்திய அரசின் கொடையை உயர்த்தி கொடுத்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். புதுச்சேரியில் விற்பனை வருவாயை தவிர வேறு வருவாய் கிடையாது. எனவே, மத்திய அரசு கவனத்தில் வைத்து கொண்டு கொடையை உயர்த்தி தர வேண்டும்" என்று பிரதமரை பார்த்து குறிப்பிட்டார்.