Published : 30 Mar 2021 09:09 PM
Last Updated : 30 Mar 2021 09:09 PM

செல்போன் குரல் பதிவு மூலம் அவதூறு பரப்பும் அதிமுக: தேர்தல் ஆணையத்தில் திமுக புகார்

சென்னை

''செல்போன் குரல் பதிவு அழைப்புகள் மூலம் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள், திரித்துப் பரப்பும் விதமாக வாக்காளர்களுக்கு செல்போன் மூலம் அதிமுகவினரால் அனுப்பப்படுகிறது. இது தேர்தல் நடத்தை விதிமீறல். இதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என திமுக சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

இன்று காலையிலிருந்து சில குறிப்பிட்ட எண்களிலிருந்து வாக்காளர்களுக்கு செல்போன் அழைப்புகள் வருகின்றன. அதில் பதிவு செய்யப்பட்ட பெண் குரலில் ஆ.ராசா பேசிய பேச்சு குறித்துப் பேசி நியாயமா என்ற கேள்வி முன்வைக்கப்படுகிறது.

தனது செயலுக்கு ஆ.ராசா வருத்தம் தெரிவித்த நிலையில், இதுபோன்று வாக்காளர்களை திசை திருப்புகிறார்கள் என திமுகவினர் தலைமைக்குப் புகார் அளித்தனர். இதுகுறித்த புகார்கள் வந்ததை அடுத்து திமுக சார்பில் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி புகார் அளித்தார்.

அவரது புகாரில் கூறியிருப்பதாவது:

“இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்ட மாதிரி நடத்தை விதிகளில், குறிப்பாக பின்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசியல் கட்சிகளின் மீதான பிற கட்சிகளின் விமர்சனங்கள், அவற்றின் கொள்கைகள் மற்றும் வேலைத்திட்டம், கடந்தகாலப் பதிவு மற்றும் வேலை ஆகியவற்றுடன் மட்டுமே இருக்க வேண்டும். கட்சிகள் மற்றும் வேட்பாளர்களின் தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சிப்பதைத் தவிர்க்க வேண்டும்.

மற்ற கட்சிகளின் தலைவர்கள் அல்லது நிர்வாகிகள் குறித்து தனிப்பட்ட முறையில் விமர்சிப்பது, பிரச்சாரத்தில் பயன்படுத்துவது அனுமதிக்கப்படுவதில்லை. மேலே கூறப்பட்ட மாதிரி தேர்தல் நடத்தை விதிமுறையை மீறி, அதிமுக தனிப்பட்ட வாக்காளர்களின் செல்போனுக்கு குரல் பதிவு மூலம் பிரச்சார (IVRS) அழைப்புகளை (பல்வேறு எண்களில் இருந்து 7968322930 & 7968379066) அனுப்புகிறது. அந்தக் குரல் பதிவு மூலம் திமுகவுக்கு எதிராக ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள், அரசியல் நிகழ்வைத் திரித்துப் பரப்பப்படுகிறது.

மேலே கூறப்பட்ட ஐ.வி.ஆர்.எஸ் (செல்போன் குரல் பதிவு) அழைப்புகள் மேற்கொள்ளப்படும் கால் சென்டர் தேர்தல் ஆணையத்தின் அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டு பரிசோதிக்கப்பட வேண்டும். அவற்றின் செயல்பாடு உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.

மேலே உள்ள எண்களிலிருந்து செய்யப்பட்ட ஐவிஆர்எஸ் அழைப்புகள் பதிவு செய்யப்பட்டு, உங்கள் விசாரணைக்காக இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. எனவே, எங்கள் கட்சிக்கு எதிராக ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் மற்றும் திரித்துப் பேசும் இந்த செல்போன் குரல் பதிவு அழைப்புகளை நிறுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறோம். மேலும் மாதிரி நடத்தை விதிகளை மீறுவதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும்”.

இவ்வாறு திமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x