ரவுடிகள், கேடிகளை கட்சியில் சேர்ப்பதுதான் சட்டம், ஒழுங்கை பாதுகாக்கும் லட்சணமா? பிரதமர் மோடிக்கு மு.க.ஸ்டாலின் கேள்வி 

ரவுடிகள், கேடிகளை கட்சியில் சேர்ப்பதுதான் சட்டம், ஒழுங்கை பாதுகாக்கும் லட்சணமா? பிரதமர் மோடிக்கு மு.க.ஸ்டாலின் கேள்வி 
Updated on
3 min read

“ரவுடிகள், கேடிகளை கட்சியில் சேர்ப்பதுதான் சட்டம், ஒழுங்கை பாதுகாக்கும் லட்சணமா?” என்று பிரதமர் மோடிக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

தென்காசி மாவட்டம், ஆலங்குளத்தில் திமுக கூட்டணி வேட்பாளர்கள் ஆலங்குளம் பூங்கோதை ஆலடி அருணா (திமுக), தென்காசி பழனி (காங்கிரஸ்), கடையநல்லூர் முஹம்மது அபூபக்கர் (இந்திய யூனியன் முஸ்லிம் லீக்), வாசுதேவநல்லூர் டாக்டர் சதன் திருமலைக்குமார் (மதிமுக), சங்கரன்கோவில் ராஜா (திமுக) ஆகியோரை ஆதரித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று பிரச்சாரம் செய்தார்.

அப்போது அவர் பேசியதாவது:

பெருந்தலைவர் காமராஜருக்கும், கருணாநிதிக்கும் இடேயயான நட்பு, தந்தை, மகன் நட்பு போன்றது. நெருக்கடிநிலை காலத்தில் முதல்வராக இருந்த கருணாநிதி, உடல் நலிவுற்று ஓய்வில் இருந்த காமராஜரை அவரது வீட்டுக்குச் சென்று சந்தித்தார்.

நெருக்கடி நிலையை எதிர்த்து ஆட்சியில் இருந்து ராஜினாமா செய்துவிடவா என்று காமராஜரிடம் கேட்டார். உடனே காமராஜர் கருணாநிதி கையைப் பிடித்துக்கொண்டு, இந்தியாவிலேயே சுதந்திர காற்றை தமிழகத்தில்தான் சுவாசிக்கிறோம். எனவே, ராஜினாமா செய்ய வேண்டாம் என்றார். உடல் நலிவுற்று இருந்தபோதும் காமராஜர் எனது திருமணத்துக்கு நேரில் வந்து வாழ்த்தினார்.

காமராஜருக்கு காந்தி மண்டபம் அருகில் நினைவு மண்டபம், சென்னை மாநகராட்சியில் காமராஜருக்கு சிலை அமைத்தது, கன்னியாகுமரியில் காமராஜருக்கு மணி மண்டபம் அமைத்தது, நெல்லையில் காமராஜருக்கு சிலை அமைத்தது திமுக. காமராஜரின் செயலாளர் வைரவனுக்கு வேலை வழங்கி அரசு வீடு ஒதுக்கீடு செய்தவர் கருணாநிதி.

வி.பி சிங் பிரதமராக இருந்தபோது,சென்னை உள்நாட்டு விமான நிலையத்துக்கு காமராஜர் பெயர் சூட்டப்பட்டது. காமராஜர் பிறநத்நாளை கல்வி வளர்ச்சி நாளாக அறிவித்து சட்டம் போட்டவர் கருணாநிதி.

இன்று தமிழகத்துக்கு பிரதமர் மோடி வந்து, வழக்கம்போல் பொய் பேசிவிட்டுச் சென்றுள்ளார். நீங்கள் என்ன பொய்ப் பிரச்சாரம் செய்தாலும் உங்கள் மோடி மஸ்தான் வேலை தமிழகத்தில் எடுபடாது. அதிமுக கூட்டணியில் இருப்பதால் ஜெயலலிதா பற்றி பேசியுள்ளார்.

இதே ஜெயலலிதா பற்றி 2014, 2016-ல் என்னென்ன பேசினீர்கள் என்பது தெரியாதா. அப்போது ஊழல் பெருச்சாளி என்று ஜெயலலிதாவை விமர்சனம் செய்ததுடன், ஜெயலலிதாவை அரசியலை விட்டு ஒழிக்க வேண்டும் என்று மோடி கூறினார்.

ஆனால், இப்போது தாராபுரம் தேர்தல் பிரசச்ரத்தில் 1989 மார்ச் 25-ல் தமிழக சட்டப்பேரவையில் ஜெயலலிதாவை திமுக ஆட்சி அவமானப்படுத்தியதாக அபாண்டமாக குற்றஞ்சாட்டியுள்ளார்.

அப்போது சட்டப்பேரவையில் ஜெயலலிதாவுக்கு அருகில் இப்போதைய திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் இருந்தார். அவர் அப்போது அதிமுகவில் இருந்தார்.

அதிமுகவை விட்டு விலகி வந்த அவர், 1989 மார்ச் 25-ல் சட்டப்பேரவையில் என்ன நடந்தது என்பதை அதே சட்டப்பேரவையில் பேசினார். சட்டப்பேரவையில் கலவரத்தை ஏற்படுத்தி, அதன் மூலம் திமுக ஆட்சியை கவிழ்த்துவிடலாம் என்று திட்டமிட்டு நடத்தப்பட்ட நாடகம் என்று கூறினார்.

மேலும், அதற்கு தானும் உடந்தையாக இருந்ததாகவும், அதற்கு இப்போது வருத்தப்படுவதாகவும் கூறினார். இது சட்டப்பேரவை அவைக் குறிப்பில் உள்ளது.

திருநாவுக்கரசர் பேசிய பேச்சை மோடிக்கு அனுப்பி வைக்கத் தயார். அதைப் படித்துப் பார்த்து புரிந்துகொள்ளுங்கள். உங்கள் கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர் சுப்பிரமணின் சுவாமிக்கு அதிமுக மகளிரணியினர் அளித்த வரவேற்பை சொல்லவே நா கூசுகிறது.

உங்கள் கட்சியைச் சேர்ந்த சுப்பிரமணியன் சுவாமியிடம் அதை கேட்டு தெரிந்துகொள்ளுங்கள். பெண் ஐஏஎஸ் சந்திரலேகா முகத்தில் திராவகம் ஊற்றப்பட்ட சம்பவத்தை அவரைக் கேட்டு தெரிந்துகொள்ளுங்கள். உயர்ந்த பதவியில் இருக்கும் மோடிக்கு பொய் பேச நா கூச வேண்டாமா?. பிரதமர் மோடி, யோசித்து, சிந்தித்து ஆதாரம் இருந்தால் பேச வேண்டும்.

ஊழலை ஒழிப்போம் என்று ஓபிஎஸ், இபிஎஸ் ஆகியோரை அருகில் வைத்துக்கொண்டு பேசுகிறார். திமுக சார்பில் முதல்வர் முதல் அமைச்சர்கள் வரை செய்த ஊழல் பட்டியல் புள்ளிவிவரத்தை ஆதாரத்தோடு புகார் அளித்துள்ளோம்.

ஆளுநரிடம் கேட்டு அதை வாங்கிப் பாருங்கள். இன்று ரவுடிகள், கேடிகளை பாஜகவில் சேர்த்துக்கொண்டு இருக்கிறீர்கள். இதுதான் சட்டம், ஒழுங்கை பாதுகாக்கும் லட்சணமா?.

ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை கொடுப்போம் என்று உறுதிமொழி கூறினீர்களே கொடுத்தீர்களா? வெளிளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கருப்பு பணத்தை மீட்டு ஒவ்வொரு குடும்பத்துக்கும் 15 லட்சம் ரூபாய் கொடுப்பேன் என்றீர்களே, கொடுத்தீர்களா?. 15 லட்சம் வேண்டாம், ஒரு 15 ஆயிரம், அதுவும் வேண்டாம், ஒரு ஆயிரத்து 500, அதுவும் வேண்டாம், ஒரு 150, அதுவும் வேண்டாம் ஒரு 15 ரூபாயாவது கொடுத்தீர்களா?. அதை கொடுக்க வக்கில்லை, வகையில்லை, இந்த லட்சணத்தில் ஊழலை ஒழிப்போம் என்று மோடி பேசினால் என்ன அர்த்தம்?.

விவசாயிகளின் வருமானம் 2 மடங்கு உயர்த்தப்படும் என்று கூறினீர்களே உயர்த்தினீர்களா? 120 நாட்களாக டெல்லியில் மழை, பனி, வெயிலில் குடும்பம் குடும்பமாக விவசாயிகள் போராடுகிறார்கள்.

அவர்களை அழைத்து பிரதமர் ஒரு நாளாவது பேசினாரா?. விவசாயிகளைப் பற்றி கலவைப்படாத ஆட்சி மத்திய ஆட்சி. அதற்கு துதி பாடும், அடிமையாக இருப்பது தமிழக ஆட்சி. நான் விவசாயி என்று முதல்வர் கூறுகிறார். பச்சைத் துண்டு போட்டால் விவசாயியா?. பச்சைத் துரோகி. நீங்கள் எப்படி முதல்வராக பொறுப்புக்கு வந்தீர்கள்?. துரோகம் செய்து, முதல்வராக வந்தவர் பழனிசாமி. போராட்டம் நடத்தும் விவசாயிகளை பார்த்து தரகர் என்று பழனிசாமி கூறினார்.

பிரமதர் மோடி மீண்டும் 2-ம் தேதி தமிழகத்துக்கு வர இருக்கிறார். நான் கேட்ட கேள்விக்கு அப்போதாவது பதில் சொல்ல வேண்டும். பதில் சொல்லாவிட்டால் 6-ம் தேதி தேர்தலில் மக்கள் பதில் சொல்வார்கள்.

பழனிசாமி முதல்வரானதும் எல்லா சமுதாயத்துக்கும் துரோகம் செய்தவர். சீர்மரபின பழங்குடியினர் டிஎன்டி என்று அழைக்கப்பட்டனர். 1979ம் ஆண்டு அதிமுக ஆட்சி அதை டிஎன்சி மாற்றியது. அதனால் மத்திய அரசின் சலுகைகள் அந்த மக்களுக்கு கிடைக்கவில்லை.

இதனால் அந்த மக்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். அவர்களது கோரிக்கையை ஏற்பதுபோல் அதிமுக அரசு கபட நாடகம் நடத்தியது. கடந்த 2009ல் அதிமுக அரச ஒர் அரசாணை வெளியிட்டது. இதில், தமிழக அரசில் டிஎன்சி என்று இருப்பவர்கள் மத்திய அரசின் உரிமைகளை பெறும்போது மட்டும் டிஎன்டி என்று மாற்றி அழைக்கப்படுவார்கள் என்று குழப்பத்தை ஏற்படுத்தியது. திமுக ஆட்சிக்கு வந்ததும் இந்த இரட்டை சான்றிதழ் முறையை ஒழிப்போம். சீர்மரபினர் பழங்குடியினர் என்று அழைக்கப்படும் வகையில் ஒரே அரசாணை வெளியிடப்படும். அவர்களது கோரிகைகளை பரிசீலிக்க சீர்மரபினர் ஆணையம் அமைக்கப்படும்.

ஓ.பன்னீர்செல்வத்தின் மீதான காழ்ப்புணர்ச்சி காரணமாக ஒரு சமுதாயத்தின் உண்மையான கோரிக்கைகளை புறக்கணிக்கலாமா?. மக்கள் கோரிக்கையை புறக்கணித்த உங்களை மக்கள் புறக்கணிப்பார்கள்.

இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in