

வங்கக் கடலில் தற்போது நிலை கொண்டுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால், காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்பதால், கடலோர பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. இதற்கிடையில், கிழக்கு மத்திய அரபிக் கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று காலை புயலாக மாறியுள்ளது. இந்த புயலுக்கு ‘மேக்’ என பெயரிடப்பட்டுள்ளது.
இந்த புயல் தொடர்ந்து மேற்கு, தென்மேற்காக நகர்ந்து ஏதன் வளைகுடா பகுதியை நோக்கி சென்று, நவ.8-ம் தேதி வலுவிழக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த புயலால் தமிழகத்துக்கு ஆபத்தில்லை. அதே நேரம், தென்மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்டிருக்கும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக, நாளை(சனிக்கிழமை) வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
இதன் காரணமாக கடலோர பகுதிகளில் ஆங்காங்கே கன மழையும், இதர பகுதிகளில் இடியுடன் கூடிய மழையும், உள் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழையும் பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இன்று (வெள்ளிக்கிழமை) காலை நிலவரப்படி தமிழகத்தில் பரவலாக மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக நெல்லை, திருச்சி, ஈரோட்டில் 5 செ.மீ., சேலம், தூத்துக்குடி, புதுக்கோட்டை, விழுப்புரத்தில் 4, திருப்பூர், சேலம், சென்னை, நாகையில் 3 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
தொடர்ந்து இன்று பகலிலும் நெல்லை, கரூர், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்கள், மற்றும் கடலோர மாவட்டங்களில் மழை பெய்தது. நாளை 8-ம் தேதி, நாளை மறுதினம் 9-ம் தேதி மழையின் அளவு அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மைய தகவல்கள் தெரிவிக்கின்றன.