Published : 30 Mar 2021 07:04 PM
Last Updated : 30 Mar 2021 07:04 PM

மதுரை சித்திரைத் திருவிழா ஏற்பாடுகளை தொடங்காத அதிகாரிகள்: குழப்பத்தில் மக்கள்

மதுரை

மதுரையில் சித்திரைத் திருவிழா கொண்டாட்டம் இன்னும் 15 நாட்களில் தொடங்கவுள்ள நிலையில், அதற்கான ஏற்பாடுகளில் அதிகாரிகள் கவனம் செலுத்தாமல் இருப்பதால் இந்த ஆண்டு திருவிழா நடக்குமா? நடக்காததா? என்ற சந்தேகம் பக்தர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

தமிழகத்தில் கொண்டாடப்படும் பாரம்பரிய திருவிழாக்களில் மதுரை சித்திரைத் திருவிழா பிரசித்தி பெற்றது.

பழமையான நகரான மதுரையில் கொண்டாடப்படம் இந்த சித்திரைத் திருவிழா தமிழர்களின் பண்பாடு, கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் திருவிழாவாக ஆண்டுதோறும் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது.

உள்ளூர் பக்தர்கள் முதல் உலக சுற்றுலா பயணிகள் வரை, இந்தத் திருவிழாவை காண மதுரையில் திரள்வார்கள். இந்தத் திருவிழா நாட்களில் ஒவ்வொரு நாளும் சாமி வீதி உலா, கிராமிய கலை நிகழ்ச்சிகள், பக்தி சொற்பொழிவுகள், சிறுவர், சிறுமிகள் தெய்வங்களைப் போல வேடமிட்டு மாசி வீதிகள் முழுக்கச் சுற்றி வரும் காட்சிகள் என மதுரையே கொண்டாட்டமாக காணப்படும்.

மீனாட்சியம்மன் கோயில் திருவிழாவும், அதைத் தொடர்ந்து நடைபெறும் கள்ளழகர் திருவிழாவும் சித்திரைத் திருவிழா இரட்டை விழாக்களாக அமைந்து, மதுரைக்குப் பெருமை சேர்க்கின்றன.

இந்த திருவிழா நேரத்தில் பெரும்பாலும் தேர்தல் வராது. அப்படியே வரும்வாய்ப்பு இருந்தாலும் மாவட்ட நிர்வாகம் முன்கூட்டியே திருவிழா நாட்கள் குறித்து மாநில தேர்தல் ஆணையத்திற்கும், மத்திய தேர்தல் ஆணையத்திற்கும் அறிக்கை அனுப்பி வராமல் பார்த்துக் கொள்வார்கள்.

ஆனால், கடந்த மக்களவைத்தேர்தல் மதுரையில் சித்திரைத் திருவிழா நாளில் ஏப்ரல்18ம் தேதி நடந்தது. அதற்கு முந்தைய நாள் ஏப்ரல் 17ஆம் தேதி மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணமும், தேர்தல் நாளான 18ஆம் தேதி தேரோட்டமும் மறுநாள் 19ஆம் தேதி வைகையாற்றில் கள்ளழகர் எழுந்தருளும் வைபவமும் நடைபெற்றது.

அதனால், மக்கள் தேர்தலில் வாக்குப்பதிவு செய்ய பெரிய ஆர்வம் காட்டாமல் சித்திரைத் திருவிழா நாளில் பங்கேற்றதால் மதுரையில் வாக்குப்பதிவு குறைந்தது.

இந்த ஆண்டு இந்த சித்திரைத் திருவிழா வரும் ஏப்ரல் 15ம் தேதி தொடங்குகிறது. 22ம் தேதி பட்டாபிஷேகம், 23ம் தேதி திக் விஜயம், 24 திருக்கல்யாணம், 25ம் தேதி தேர்த்திருவிழா, 26 எதிர்சேவை, 27ம் தேதி வைகை ஆற்றில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சிகள் நடக்கின்றன.

தேர்தல் நாளில் திருவிழா நடக்காவிட்டாலும் இந்தத் திருவிழா கொண்டாட்ட காலத்தில் திருவிழா நடப்பதால் இந்த திருவிழாவுக்கான ஏற்பாடுகளில் தமிழக அரசும், அதிகாரிகளும் இன்னும் ஆர்வம் காட்டாமல் உள்ளனர்.

அரசுத் தரப்பில் இருந்து இதுவரை எந்த உத்தரவும் வராதால் மதுரையில் சித்திரைத் திருவிழா ஏற்பாடுகளை அதிகாரிகள் மேற்கொள்ளாமல் உள்ளதாகக் கூறப்படுகிறது.

அதனால், திருவிழா நடக்குமா? அல்லது கரோனாவை காரணம் சொல்லி கடந்த ஆண்டைபோல் நடத்தாமல் விட்டுவிடுவார்களா? என்ற அச்சம் பக்தர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

சித்திரைத் திருவிழா தேர் உலாவரும் மாசி வீதிகள், திருவிழாவுக்கு முன் சீரமைக்கப்படும். ஆனால், தற்போது இந்த வீதிகளில் நடக்கும் ஸ்மார்ட் சிட்டி பணிகள் தற்போது வரை நிறைவடையவில்லை.

கீழ மாசி, வடக்கு மாசி வீதிகளில் முடியாமல் உள்ள ‘ஸ்மார்ட் சிட்டி’ சாலைப்பணிகளை தற்போது வேகமாக முடித்தால்தான் சித்திரைத்தேர் இந்த வீதிகளில் உலா வர முடியும்.

ஆனால், அதற்கான அக்கறையை மாநகராட்சி அதிகாரிகள் காட்டுவதாக தெரியவில்லை.

இந்துசமய அறநிலையத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘சித்திரை திருவிழா, கரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகள் படி திருவிழா நடத்தப்படும். ஆனால், இன்னும் அரசு தரப்பில் எந்த உதரவும் வரவில்லை. அதற்காக காத்திருக்கிறோம், ’’ என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x