

தேர்தல் பறக்கும் படை அதிகாரியை மிரட்டிய வழக்கில் தமிழக அமைச்சர் கடம்பூர் ராஜூ முன்ஜாமீன் கேட்டு உயர் நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்துள்ளா்.
தமிழக அமைச்சர் கடம்பூர் ராஜூ, கோவில்பட்டி தொகுதியில் அதிமுக வேட்பாளராக போட்டியிடுகிறார்.
கோவில்பட்டி தொகுதிக்கு உட்பட்ட ஊத்துப்பட்டி விலக்கு அருகே மார்ச் 12-ல் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தார்.
அந்த வழியாக வந்த கடம்பூர் ராஜூ வாகனத்தையும் பறக்கும் படையினர் சோதனைக்காக நிறுத்தினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பறக்கும் படை குழுத் தலைவரை அமைச்சர் மிரட்டியதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து பறக்கும் படை அதிகாரியை மிரட்டியதாக கடம்பூர் ராஜூ மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் முன்ஜாமீன் கேட்டு, அவர் உயர் நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்தார்.
அதில், என் மீது தவறாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. வழக்கு எண்ணிக்கைக்காகவும், என் மீது அவதூறு பரப்பும் நோக்கத்திலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
எனவே, முன்ஜாமீன் வழங்க வேண்டும் என அமைச்சர் கூறியிருந்தார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.