Published : 30 Mar 2021 06:41 PM
Last Updated : 30 Mar 2021 06:41 PM

காங்கிரஸும் திமுகவும் ஊழலின் கண்கள்; தொழில்கள் வளர்வதை ஒருபோதும் அனுமதிக்காது: பிரதமர் மோடி குற்றச்சாட்டு

காங்கிரஸும், திமுகவும் ஊழலின் கண்கள். தொழில்கள் வளர்வதை ஒருபோதும் அனுமதிக்காது என, பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் போட்டியிடும் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன், மற்ற பாஜக வேட்பாளர்களை ஆதரித்து, இன்று (மார்ச் 30) தாராபுரம் - உடுமலை சாலையில், கவுண்டச்சி புதூர் ஊராட்சிக்கு உட்பட்ட மாருதி நகர் அருகே 68 ஏக்கரில் ஏற்படுத்தப்பட்டுள்ள பிரச்சாரக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார். இதில், முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

இக்கூட்டத்தில், பிரதமர் மோடி பேசியதாவது:

"கொங்குநாடு பகுதியிலே இருக்கக்கூடிய மக்களை நான் பாராட்டுகிறேன். உங்களின் தொழிலை வளர்க்க வேண்டும், தொடங்க வேண்டும் என்ற உத்வேகத்துக்காகப் பாராட்டுகிறேன். கொங்கு மக்களான நீங்கள் இந்த நாட்டுக்குச் செல்வத்தைச் சேர்த்துக் கொண்டிருக்கிறீர்கள். இந்த நாட்டுக்கு மரியாதையைக் கொடுத்துக் கொண்டிருக்கிறீர்கள். உங்களின் வியாபார நேர்த்தியை, தொழில் நேர்த்தியை இந்த நாட்டு மக்கள் அறிவார்கள்.

ஆனால், அதேசமயம் நீங்கள் அளவிடற்கரிய கருணையும் கொண்டவர்கள். கடந்த ஆண்டு இங்கிருக்கும் சிறு, குறு, பெரிய தொழில் நிறுவனங்களெல்லாம், உங்கள் சக்திக்கு மீறி, மக்களுக்கு உதவி செய்தீர்கள் என்பதை நாங்கள் பார்த்தோம். என்னுடைய அரசாங்கத்திலிருந்தும், நான் தனிப்பட்ட முறையிலும் இந்தப் பகுதியின் தொழில் மற்றும் வியாபார வளர்ச்சிக்கு நாங்கள் உறுதுணையாக இருப்போம்.

எளிதாகத் தொழில் நடத்தக்கூடிய, தொடங்கக்கூடிய வாய்ப்புள்ள நாடுகளின் பட்டியலில் உலக வங்கியின் தரத்தில் நாம் எவ்வாறு உயர்ந்திருக்கிறோம் என்பது உங்களுக்குத் தெரியும். அதேபோல, கடந்த ஆண்டு நாம் பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டோம்.

உற்பத்தி சார்ந்து ஊக்குவிக்கின்ற திட்டம் கடந்த டிசம்பரில் எங்களால் அறிமுகம் செய்யப்பட்டது. அதேபோல், இந்தப் பகுதியில் வரவிருக்கும் ராணுவத் தளவாடங்களை உற்பத்தி செய்யக்கூடிய ஒரு மிகப்பெரிய திட்டம் பல்வேறு நன்மைகளை இந்தப் பகுதிக்குக் கொண்டு வரும். சில தினங்களுக்கு முன்பாகத் தமிழகத்தில் தயாரிக்கப்பட்ட ராணுவக் கவச வாகனத்தை நம்முடைய வட இந்திய எல்லைப் பகுதிகளைப் பாதுகாப்பதற்காக நான் நாட்டுக்கு அர்ப்பணித்தேன்.

தமிழகத்தில் தரமான பொம்மைகளைத் தயாரிப்பதற்கான ஒரு புதிய மையமும் உருவாகப்போகிறது. அதன் வாயிலாக உலகத்திற்கு தரமான பொம்மைகளைத் தயாரிக்கக்கூடிய மாநிலமாகவும் நம்மால் மாற முடியும்.

சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் நம் நாட்டின் பொருளாதாரத்திற்கு முதுகெலும்பைப் போன்றவை. நம் நாட்டில் இந்த நிறுவனங்களின் வரையறையை நாங்கள் மாற்றியமைத்திருக்கிறோம். இதன் மூலம், நிறைய பேர் தொழில் செய்வதற்கான வாய்ப்பு உருவாகியிருக்கிறது. அதேபோல, 14 ஆயிரம் கோடி ரூபாய் இங்கிருக்கும் 3.6 லட்சம் சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்காக வழங்கப்பட்டிருக்கிறது. அதேபோல, 1.5 லட்சம் மக்கள் இந்த சிறு, குறு தொழில்துறையின் வட்டித் தள்ளுபடி திட்டத்தின் வாயிலாகப் பயனடைந்திருக்கின்றனர். 8.5% சிறு, குறு தொழில் நிறுவனங்கள் மத்திய அரசின் கடன் உதவி திட்டத்தின்கீழ் உதவி பெற்றிருக்கிறார்கள்.

நாம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். வரி வசூல் தொடர்பான நடைமுறைகளிலிருந்து மக்களைப் பாதுகாப்பதற்காக முக்கியமான முயற்சிகளை நாங்கள் மேற்கொண்டு வருகிறோம்.

காங்கிரஸும், திமுகவும் ஊழலின் கண்கள். நம்முடைய தொழில்கள் வளர்வதை ஒருபோதும் அனுமதிக்காது. கடந்த காலங்களில் அவர்கள் செய்ததைப் போலவே, அவர்களின் உள்ளூர் ஆட்கள் பணத்தைத் தொழில் நடத்துபவர்களிடமிருந்து, கட்டாயமாகப் பெறுவதைத் தொடர்ச்சியாக நடத்துவார்கள். அவர்கள் அரசாங்கத்தில் இருந்தபோது இந்தப் பகுதியின் மின்சார விநியோகம் எப்படி இருந்தது என்பது உங்களுக்குத் தெரியும். தொடர்ச்சியான மின்வெட்டு, தொழில்களை எப்போதும் பாதித்தே வந்திருக்கிறது.

திருக்குறளின் மையக்கருத்து விவசாயிகளுக்கு எப்போதும் மரியாதை கொடுப்பது. விவசாயம் என்பது மிக மிகச் சிறந்தது. விவசாயம் செய்ய முடியாத மற்றவர்களுக்காகவும் விவசாயி இந்த சமுதாயத்திற்காக தொடர்ச்சியாக உழைத்துக்கொண்டே இருக்கிறான், கொடுத்துக்கொண்டே இருக்கிறான் எனத் திருக்குறள் சொல்கிறது. இப்போது நம் விவசாயத் துறை உடனடியாக நவீனம் அல்லது சீர்திருத்தம் வேண்டி நிற்கிறது. நம்முடைய கவனம் என்பது, சிறு விவசாயிகளை நோக்கியே இருக்கிறது. சிறு விவசாயிகளை இடைத்தரகர்களிடமிருந்து காப்பாற்றுவதற்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். மண் வள அட்டை, விவசாயிகளுக்கான கடனுதவி திட்டம், விவசாயப் பொருட்களை விற்பதற்கான திட்டம் எல்லாம் விவசாயிகளின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கிறது.

எங்கள் தேர்தல் அறிக்கையில் வருடத்திற்கு ரூ.6,000 மீனவர்களுக்குக் கொடுப்போம் எனச் சொல்லியிருக்கிறோம். நம் விவசாயத் துறை நீர் பற்றாக்குறை பிரச்சினைகளைச் சந்தித்து வருகிறது. நீர் ஆதாரங்களுக்காக மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வந்திருக்கிறது. ஒரு சொட்டு நீர் அதிக விளைச்சலை தரக்கூடியதாக மாற வேண்டும் என்பதே எங்களின் மந்திரம்.

விவசாயிகள் பழைய பாசன முறையை மாற்றுவதற்கான பயிற்சியையும் நாங்கள் வழங்குகிறோம். பழைய பாசன வாய்க்கால்கள் தூர்வாரப்பட்டுள்ளன. புதிய நீர்ப்பாசன கட்டுமானங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. உயிர் நீர் திட்டத்தின் வாயிலாக அத்தனை வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பைத் தருவதற்காக நாங்கள் உறுதி கொண்டிருக்கிறோம். தமிழகத்தில் மட்டும் 16 லட்சம் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. வீடுகளில் நீர் பற்றாக்குறைய நீக்குவதற்கு நாங்கள் முயற்சி செய்துகொண்டிருக்கிறோம்".

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x