Published : 30 Mar 2021 03:48 PM
Last Updated : 30 Mar 2021 03:48 PM

ஒரு தகவலைப் படிக்காமல் பதிவு செய்தேன் என்று கூற எஸ்.வி.சேகர் எழுதப் படிக்கத் தெரியாதவரா?- உயர் நீதிமன்றம் கேள்வி

சென்னை

பெண் பத்திரிகையாளர் குறித்து அவதூறு கருத்தைப் பகிர்ந்த நடிகர் எஸ்.வி.சேகர் மீதான குற்றச்சாட்டு பதிவுக்குத் தடை விதித்துள்ள சென்னை உயர் நீதிமன்றம், சிறப்பு நீதிமன்ற வழக்கு விசாரணையின்போது ஆஜராகவும் விலக்கு அளித்துள்ளது.

பெண் பத்திரிகையாளர்கள் பணிபுரிவது குறித்து தரக்குறைவான கருத்தை நடிகரும், பாஜக பிரமுகருமான எஸ்.வி.சேகர் 2018ஆம் ஆண்டு தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இதைத் தொடர்ந்து அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் மிதார் மொய்தீன் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.

அதை விசாரித்த சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையின் சைபர் கிரைம் பிரிவு எஸ்.வி.சேகர் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் 3 பிரிவுகள் மற்றும் பெண்கள் மீதான கொடுமைகள் தடுப்புச் சட்டத்தின் ஒரு பிரிவு என 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தது.

இது தொடர்பான வழக்கு சென்னை எம்.பி.,எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கிலிருந்து எஸ்.வி.சேகரை விடுவிக்க சிறப்பு நீதிமன்றம் மறுத்துவிட்டது.

இந்நிலையில் தனக்கெதிரான வழக்கு விசாரணைக்குத் தடை விதிக்கவும், ஆஜராக விலக்கு அளிக்கவும், வழக்கை ரத்து செய்ய வேண்டும் போன்ற கோரிக்கைகளுடன் எஸ்.வி.சேகர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.

இந்த வழக்கு நீதிபதி என்.சதீஷ்குமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, எஸ்.வி.சேகர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “கலிபோர்னியாவில் உள்ள திருமலை சடகோபன் என்பவர் பக்தி மற்றும் தேசப்பற்று தொடர்பாகத் தனது கட்சிக்காரருக்கு மெசேஜ் அனுப்புபவர் என்பதால், அதைப்போல நினைத்து அவர் 2018ஆம் ஆண்டு ஏப்ரல் 19-ல் எழுதியதை ஃபார்வர்ட் மட்டுமே செய்ததாகவும், பின்னர் பெண் பத்திரிகையாளர்கள் குறித்த அவதூறு எனத் தெரியவந்ததால், உடனடியாக ஏப்ரல் 20ஆம் தேதியே நீக்கிவிட்டதுடன், உடனடியாகத் தனது செயலுக்கு அவர் மன்னிப்பு கோரியிருந்தார்.

எஸ்.வி.சேகர் தனிமனித ஒழுக்கமும், பெண்கள் மீது மிகுந்த மதிப்பும் மரியாதையும் வைத்துள்ளார். பதிவை நீக்கி மன்னிப்பு கோரிய பிறகும் வழக்கிலிருந்து விடுவிக்கக் கோரிய மனுவை சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

இதே விவகாரம் தொடர்பான புகார்களில் அம்பத்தூர் நீதிமன்ற வழக்கிற்கு சென்னை உயர் நீதிமன்றமும், கரூர், திருநெல்வேலி வழக்குகளை சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையும் விசாரணைக்குத் தடை விதித்துள்ளது” என வாதிட்டார்.

காவல்துறை தரப்பில், “பெண்கள் குறித்து அவதூறாகப் பதிவான கருத்தை எஸ்.வி.சேகர் பதிவிடவில்லை என்றாலும், அதை ஃபார்வர்ட் செய்திருப்பதும் குற்றம்தான் என்பதால், அவர் மீதான வழக்கை ரத்து செய்யக் கூடாது” என்று தெரிவிக்கப்பட்டது.

அப்போது நீதிபதி, முகநூலில் வந்த தகவலைப் படிக்காமல் ஃபார்வர்ட் செய்துவிட்டேன் எனக் கூறுவதற்கு எஸ்.வி.சேகர் எழுதப் படிக்கத் தெரியாதவரா? எனக் கேள்வி எழுப்பினார். சமூகத்தை எப்படி மதிக்க வேண்டும் எனப் புரிந்துகொள்ள முடியாத இவர்கள் எப்படி முக்கியப் பிரமுகர் எனச் சொல்லிக்கொள்கிறார்கள்? என்றும் கேள்வி எழுப்பினார்.

பின்னர், எஸ்.வி.சேகர் மீதான வழக்கில் சிறப்பு நீதிமன்றம் குற்றச்சாட்டு பதிவு செய்யத் தடை விதித்தும், வழக்கில் அவர் ஆஜராக விலக்கு அளித்தும் நீதிபதி உத்தரவிட்டார்.

மேலும், வழக்கு குறித்து காவல்துறை பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஏப்ரல் 16ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x