

பிரதமர் மோடியை வரவேற்பதற்கு ஒரு காரணம் கூட இல்லை என, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, கே.எஸ்.அழகிரி இன்று (மார்ச் 30) வெளியிட்ட அறிக்கை:
"பிரதமர் மோடி இன்று புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்கிறார். தமிழகத்துக்குத் தொடர்ந்து துரோகம் இழைத்த அவர், தமிழக மண்ணில் காலடி எடுத்து வைக்கும் தார்மீக உரிமையை இழந்துவிட்டார்.
தாராபுரத்தில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ளும் அவருக்குக் கருப்புக் கொடி காட்டி எதிர்ப்பு தெரிவிக்க விவசாயிகள் தயாராகிவிட்டார்கள். 'கோ பேக் மோடி' என்ற கோஷம் விண்ணை முட்டும் அளவுக்கு இன்றைக்கு ஒலிக்க வேண்டும். 'தமிழகத்திற்குள் நுழையாமல் திரும்பிப் போ...' என்று தமிழக மக்கள் கோஷமிடுவது ஏதோ உணர்ச்சிவயப்பட்டு அல்ல.
கடந்த ஆறரை ஆண்டு கால மோடி ஆட்சியில் மக்கள் பட்ட துன்பங்கள், மாற்றாந்தாய் மனப்போக்கு, தமிழர் கலாச்சாரம் மற்றும் பண்பாடு மீது நடத்திக் கொண்டிருக்கும் தாக்குதல்கள், தமிழரின் உரிமையைப் பறிக்கும் நடவடிக்கைகள் என, மோடியைத் திரும்பிப் போகச் சொல்வதற்குப் பல காரணங்கள் உள்ளன. ஆனால், அவரை வரவேற்பதற்கு ஒரு காரணம் கூட இல்லை என்பதுதான் எதார்த்தம்.
தமிழகம் வரும் மோடியை ஒட்டுமொத்த தமிழர்களும் ஒரே குரலில் 'திரும்பிப் போ மோடி' என்று உரக்கக் கோஷமிடுவதற்கான காரணங்களை இங்கே பட்டியலிட்டுள்ளேன்.
மானியத்துடன் கூடிய எரிவாயு சிலிண்டர் விலை கடந்த பிப்ரவரி 4ஆம் தேதி 25 ரூபாய் உயர்த்தப்பட்டது. தொடர்ந்து பிப்ரவரி மாதம் 15ஆம் தேதி 50 ரூபாய் உயர்த்தப்பட்டது. இதன்மூலம் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 785 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்ந்து குடும்பத் தலைவிகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வந்தாலோ, அல்லது 2014ஆம் விதிக்கப்பட்ட கலால் வரியை விதித்தாலோ, ஒரு லிட்டர் பெட்ரோலை 44 ரூபாய்க்கு விற்க முடியும். அதேபோல், கலால் வரிக்கு மாற்றாக 28 சதவிகித ஜிஎஸ்டி விதித்தால், ஒரு லிட்டர் பெட்ரோலை 38 ரூபாய்க்கு விற்க முடியும். 2014ஆம் ஆண்டில் 20 சதவிகிதமாக இருந்த கலால் வரி, 2021ஆம் ஆண்டில் 200 சதவிகிதமாக உயர்ந்திருக்கிறது. இதுவரை ரூபாய் 21 லட்சம் கோடியை கலால் வரியாக மத்திய பாஜக அரசு வசூலித்திருக்கிறது. பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு இதுதான் காரணம்.
பொதுத்துறை நிறுவனங்களின் 1 லட்சத்து 75 ஆயிரம் கோடி மதிப்புள்ள பங்குகளை, 2022ஆம் ஆண்டுக்குள் விற்பது என நிதிநிலை அறிக்கையில் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பாரத் பெட்ரோலியம், ஏர் இந்தியா, கப்பல்துறை, ரயில்வே, இந்தியக் காப்பீட்டுக் கழகம் ஆகியவற்றின் சொத்துகளை விற்று, இலக்கை அடைய இருப்பதாக இந்த நிதிநிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மோடி ஆட்சியில் 100 கோடீஸ்வரர்களின் சொத்து மதிப்பு கடந்த ஆண்டில் மட்டும் 13 லட்சம் கோடியாக உயர்ந்து இருப்பது அதிர்ச்சியளிக்கிறது. இந்த தொகையில் 1 சதவிகிதத்தை ஒதுக்கினால் ஒவ்வொரு ஏழைக்கும் 1 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்க முடியும். ஆனால், ஏழை, எளியவர்களுக்காக நீலிக் கண்ணீர் வடிக்கும் பிரதமர் மோடி, அதானி, அம்பானியின் சொத்துக்களைப் பெருக்குவதற்குத்தான் முனைப்பு காட்டுகிறார்.
இந்தியாவில் சமஸ்கிருத மொழியைப் பரப்புவதற்காகக் கடந்த 3 ஆண்டுகளில் ரூ.643.83 கோடியை பாஜக அரசு செலவழித்திருக்கிறது. செம்மொழித் தகுதி பெற்றுள்ள தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஒடியா ஆகிய 5 மொழிகளுக்கு மொத்தமாக ஒதுக்கப்பட்ட தொகை ரூ.29 கோடி மட்டும்தான். அதேசமயம், சமஸ்கிருதத்துக்கு 22 மடங்கு அதிகமாக ஒதுக்கப்பட்டுள்ளது. 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, சமஸ்கிருத மொழி பேசுபவர்கள் எண்ணிக்கை 28 ஆயிரத்து 821 மட்டுமே. அதாவது, 121 கோடி மக்கள் தொகையில் 0.00198 சதவிகிதம்தான். இதற்குத் தான் மக்கள் வரிப்பணத்திலிருந்து சமஸ்கிருத மொழியை வளர்க்கப் பாரபட்சமாக பாஜக அரசு நிதியை ஒதுக்கியுள்ளது.
கடந்த 2011இல் அன்றைய மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்ட சுற்றறிக்கைக்குப் பிறகு கூட, தமிழகத்தில் தொடர்ந்து 2012, 2013, 2014 ஆகிய ஆண்டுகளில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக் காலத்தில் ஜல்லிக்கட்டு நடைபெற்றது. 2015-லிருந்துதான் ஜல்லிக்கட்டு நடத்த தடை விதிக்கப்பட்டது. அதை நீக்குவதற்கு மத்திய பாஜக அரசு உரிய நடவடிக்கை எடுக்காததால்,மெரினாவில் தமிழர்களின் புரட்சி நடைபெற்று ஜல்லிக்கட்டு மீண்டும் நடைபெறுகிற சூழல் ஏற்பட்டது.
கடந்த காலங்களில் புயல் சேதங்களுக்காக மத்திய அரசிடம் தமிழக அரசு கேட்ட மொத்த நிவாரணத் தொகை 1 லட்சத்து 20 ஆயிரத்து 500 கோடி ரூபாய். ஆனால், மோடி அரசு 6 கட்டங்களாகக் கொடுத்ததோ வெறும் 5,778 கோடி ரூபாய். தமிழக அரசு கேட்ட தொகைக்கு 5 சதவிகிதத்துக்குக் குறைவாக நிவாரண நிதி வழங்கப்பட்டிருக்கிறது.
இந்தியாவிலேயே கரோனா பாதிப்பு எண்ணிக்கையில் தமிழகம் இரண்டாவது இடத்திலிருந்தது. கரோனாவை எதிர்கொள்ள ரூ.16 ஆயிரம் கோடி ரூபாய் தருமாறு மத்திய அரசிடம் தமிழக அரசு கோரியது. ஆனால், வெறும் 510 கோடி ரூபாயை மட்டுமே மோடி அரசு வழங்கியது.
அமித் ஷாவின் உள்துறை அமைச்சகம் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், 'ஒரே நாடு ஒரே தகுதி' என்ற அடிப்படையில் நீட் தேர்வு கொண்டு வரப்பட்டுள்ளது. புதுச்சேரி அரசின் 10 சதவிகித இட ஒதுக்கீடு முடிவு, நீட் தேர்வின் சாராம்சத்தையே நீர்த்துப் போகச் செய்துவிடும்.
தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் சேர 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கச் சட்டம் இயற்றப்பட்டுள்ளது. அதுகுறித்து மத்திய அரசின் கவனத்துக்குக் கொண்டு வரப்படவில்லை என்று கூறப்பட்டுள்ளது. இந்த பதில் தமிழகத்தையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளதோடு, மாணவர்கள் மத்தியில் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் நீட் தேர்வு திணிக்கப்பட்டதால் தலித் சமுதாயத்தைச் சேர்ந்த அனிதா உள்ளிட்ட 16 மாணவர்கள் தேர்வில் வெற்றி பெற்றும் மருத்துவப் படிப்பில் சேர முடியாத காரணத்தால் தற்கொலை செய்து கொண்டார்கள்.
கடந்த 73 ஆண்டுகளில் இல்லாத அளவுக்குப் பொருளாதாரம் அழிக்கப்பட்டுள்ளது. சாதாரண மனிதனின் வாழ்க்கை நிலைகுலைந்து போயிருக்கிறது. இந்தியாவைப் பொருளாதார அழிவை நோக்கி பிரதமர் மோடி நகர்த்திக் கொண்டிருக்கிறார். பண மதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி., பொது முடக்கம் ஆகியவை பெரிய அடி மட்டுமல்ல... சாதாரண மக்கள் மீது நடத்தப்பட்ட பேரழிவு தாக்குதல்கள்.
தமிழகத்தின் மீது புதிய கல்விக் கொள்கையைப் புகுத்தி இந்தி திணிப்பை பாஜக அரசு செய்கிறது. தமிழ்க் கலாச்சாரத்தை அவமதிக்கிற வகையில் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. பொதுத் துறை நிறுவனங்களில் வேலை வாய்ப்புகளுக்காக நடத்தப்பட்ட தேர்வுகளில் தமிழ் புறக்கணிக்கப்பட்டது. நாடு முழுவதும் இருக்கிற தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் உள்ள 12 ஆயிரம் எழுத்தர் பணிகளுக்கான காலி இடங்களை நிரப்புவதற்காக வங்கிப் பணியாளர்கள் தேர்வு நிறுவனம் அதற்கான தேர்வை ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே நடத்தியது. இதில் குறைந்தது 3 ஆயிரம் காலிப் பணியிடங்கள் தென் மாநிலங்களில் உள்ளது என்ற போதிலும், மாநில மொழிகளில் தேர்வு எழுதுகிற உரிமை மறுக்கப்பட்டது.
அதேபோல், தபால் துறையிலும் இந்த நடைமுறை பின்பற்றப்பட்டது. இதன் மூலம், தமிழர்களின் அடையாளத்தை அழிக்கிற முயற்சியில் பாஜக ஈடுபட்டு, வகுப்புவாத ஒற்றைக் கலாச்சாரத்தைத் தமிழகத்தின் மீது திணிக்கத் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதிலிருந்து தமிழகத்தைப் பாதுகாக்க வேண்டுமானால், பாஜகவின் பிடியிலிருக்கும் அதிமுக ஆட்சியை அகற்ற வேண்டும். அப்படி அகற்றுவதன் மூலமே நமது தனித்தன்மை காப்பாற்றப்படும் என்ற எண்ணம் ஒவ்வொரு தமிழர்கள் மத்தியிலும் ஏற்பட்டுள்ளது.
கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வரலாறு காணாத வேலையில்லாத் திண்டாட்டத்தால் இந்தியா பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தேசிய புள்ளியியல் ஆய்வக நிறுவனத் தரவுகள் தெரிவிக்கின்றன. வறுமை 23 சதவிகிதம் அதிகரித்துள்ளது.
2003ஆம் ஆண்டின் மின்சாரச் சட்டத்தில், திருத்தங்களைச் செய்ய மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. இதனால், தமிழகத்தில் கடந்த 30 ஆண்டுகளாக விவசாயிகள் அனுபவித்து வருகிற இலவச மின்சாரம் நிச்சயமாக ரத்து செய்கிற சூழல் இன்றைக்கு ஏற்பட்டிருக்கிறது.
இப்படித் தொடர்ந்து தமிழர்களுக்குத் துரோகம் இழைத்துவிட்டு, சமூக நீதியைக் குழிதோண்டிப் புதைக்கத் துடிக்கும் பிரதமர் மோடி எந்த முகத்தோடு வந்து தமிழக மக்களிடம் வாக்குகளைக் கேட்பார். மோடியின் ஒவ்வொரு அசைவும் தமிழர்களுக்கும் தமிழ் மொழிக்கும் எதிரானதாகவே உள்ளது.
இந்த மண்ணில் மதக் கலவரங்களைக் கட்டவிழ்த்துவிட நினைக்கிறார்கள். இந்த மண்ணின் கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் அழிக்க நினைக்கிறார்கள். இதற்கு எதிராக தமிழ் இளைஞர்களும் வீறு கொண்டு எழுந்துள்ளனர். 'மோடியே திரும்பிப் போ' என்ற குரல்கள், தமிழர்களின் ஒட்டுமொத்த குரலாக ஒலித்துக் கொண்டிருக்கின்றன. அந்தக் குரல்கள் விண் அதிர ஒலிக்கும் என்பதில் சந்தேகமில்லை.
கடந்த மக்களவைத் தேர்தலில் தமிழக வாக்காளர்கள் ஒட்டுமொத்தமாக பாஜக - அதிமுக கூட்டணியை நிராகரித்ததைப் போல, வருகிற சட்டப்பேரவை தேர்தலிலும் வாக்களித்து மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் தலைவர் ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமைவது உறுதியாகி வருகிறது. பத்தாண்டு கால அதிமுக ஆட்சி நீடிப்பதற்கு எந்தவிதமான நியாயமான காரணங்களும் இல்லை. தமிழகத்துக்கு விடிவு காலம் ஆட்சி மாற்றத்தின் மூலமே ஏற்பட முடியும்".
இவ்வாறு கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.