

குறிஞ்சிப்பாடி திமுக வேட்பாளரும், கடலூர் கிழக்கு மாவட்ட திமுக செயலாளருமான எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கரோனா தொற்றால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது தொகுதியில் அவரது மகன் கதிரவன் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார்.
குறிஞ்சிப்பாடி தொகுதியில் திமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சரும், கடலூர் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், தொகுதியின் தற்போதைய எம்எல்ஏவுமான எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் போட்டியிடுகிறார். அதிமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் செல்வி ராமஜெயம் பேட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மய்யம், அமமுக உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் மற்றும் சுயேச்சைகள் போட்டியிடுகின்றனர். ஆனால், அதிமுக, திமுக வேட்பாளர்களிடைய கடும் போட்டி நிலவி வருகிறது.
திமுக வேட்பாளர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், அதிமுக வேட்பாளர் செல்வி ராமஜெயம் ஆகியோர் தொகுதி முழுவதும் இரவு, பகல் பாராமல் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டு வந்தனர். இரு கட்சித் தொண்டர்களும் தனித்தனியாக வாக்கு கேட்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், நேற்று (மார்ச் 29) மாலை திமுக வேட்பாளர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்துக்கு உடல் சோர்வு, உடல் வலி உள்ளிட்டவை ஏற்பட்டன. இதனையடுத்து, அவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், நேற்று இரவு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, திமுக வேட்பாளர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தின் மகனும் எம்.ஆர்.கே.கல்விக் குழுமத்தின் தலைவருமான எம்.ஆர்.கே.பி.கதிரவன் இன்று (மார்ச் 30) தொகுதியில் தந்தைக்கு ஆதரவாக தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். கதிரவன் திருவந்திபுரம், திருமாணிக்குழி, ஓட்டேரி ராமாபுரம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார். திமுக மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகளும் உடன் செல்கின்றனர்.
திமுக வேட்பாளர் எம்.ஆர்.கே.பன்னீசெல்வம் இந்தத் தொகுதியில் 6-வது முறையாக பேட்டியிடுகிறார். 4 முறை வெற்றி பெற்று, ஒரு முறை தோல்வியடைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.