

செஞ்சி தொகுதியில் திமுக வேட்பாளருக்கு ஆதரவாகத் தேர்தல் நடத்தும் அலுவலர் செயல்படுவதாகக் கூறி பாமக, பாஜகவினர் செஞ்சி 4 முனை சந்திப்பில் இன்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.
திமுக வேட்பாளர் கே.எஸ்.மஸ்தானும், அதிமுக கூட்டணி சார்பில் பாமக வேட்பாளர் எம்.பி.எஸ்.ராஜேந்திரனும் செஞ்சி தொகுதியில் போட்டியிடுகின்றனர். இருவரும் பரபரப்பாகப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கிடையே செஞ்சி தொகுதி திமுக வேட்பாளருக்கு ஆதரவாகத் தேர்தல் நடத்தும் அலுவலர் செயல்படுவதாகப் பாமக வேட்பாளர் புகார் தெரிவித்திருந்தார்.
இது தொடர்பாக அவர் அளித்த மனுவில், ''செஞ்சி தொகுதியின் தேர்தல் நடத்தும் அலுவலராகப் பதவி வகிக்கும் நெகருன்னிசா திமுக வேட்பாளர் மஸ்தானின் உறவினர் ஆவார். திமுக வேட்பாளர் வாக்காளர்களுக்கு அரிசி, பணம் கொடுப்பது குறித்துப் புகார் தெரிவித்தபோது எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. புகார் தெரிவிக்க செல்பேசியில் பல முறை அழைத்தாலும் அழைப்பை ஏற்பதில்லை. ஆனால், வேறு எண்களில் அழைத்தால், அழைப்பை ஏற்றுப் புகார் சொல்வதைக் கேட்கிறார்.
மேலும் தேர்தல் நடத்தும் அலுவலரின் அப்போதைய இருப்பிடம், அவர்களின் செயல்பாடுகள் குறித்தும் தகவல் தெரிவிக்கிறார். மேலும் அரிசி, பண விநியோகம் செய்வதற்கு திமுக வேட்பாளருக்கு உதவியாகவும் இருக்கிறார். திமுக வேட்பாளரின் தேர்தல் விதிமீறல்களுக்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை'' என்று கூறப்பட்டிருந்தது.
புகார் மனு குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்பட்ட நிலையில், இன்று காலை 11 மணிக்குப் பாமக வேட்பாளர் ராஜேந்திரன் தலைமையில் பாமக, பாஜகவினர் செஞ்சி 4 முனை சந்திப்பில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இத்தகவல் அறிந்த செஞ்சி வட்டாட்சியர் ராஜன், பாமக, பாஜகவினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். எனினும் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்த நிலையில், செஞ்சி டிஎஸ்பி இளங்கோவன் பேச்சுவார்த்தை நடத்தி, ஆட்சியரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.
இந்நிலையில் பாமக வேட்பாளர் ராஜேந்திரன் மாலை 5 மணிக்குள் நடவடிக்கை இல்லையெனில் மீண்டும் பெரிய அளவில் சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும் என்ற நிபந்தனையோடு சாலை மறியலை விலக்கிக் கொண்டார். இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.