

திருப்பூர் மாவட்டம் தாராபுரம், கேரள மாநிலம் பாலக்காடு, புதுச்சேரி ஆகிய இடங்களில் பிரச்சாரம் செய்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை கோவைக்கு வந்தார்.
தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து, பிரதமர் நரேந்திர மோடி இன்று (மார்ச் 30) கேரள மாநிலம் பாலக்காடு, தமிழகத்தின் திருப்பூர் மாவட்டம் தாராபுரம், புதுச்சேரி மாநிலம் ஆகிய இடங்களில் பிரச்சாரம் செய்கிறார். தேர்தல் பிரச்சாரங்களில் கலந்து கொள்வதற்காக, பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இருந்து விமானம் மூலம் கோவை பீளமேடு சர்வதேச விமான நிலையத்துக்கு இன்று காலை 10.15 மணிக்கு வந்தார். கட்சி நிர்வாகிகள் அவரை வரவேற்றனர்.
பின்னர், அங்கிருந்து தனி ஹெலிகாப்டரில், பாலக்காடு நோக்கி பிரதமர் மோடி புறப்பட்டுச் சென்றார். அங்கு பிரச்சாரத்தை முடித்துக் கொண்டு 12.50 மணிக்கு பிரதமர் மோடி பாலக்காட்டில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் தாராபுரம் செல்கிறார். தாராபுரம் - உடுமலை சாலையில், கவுண்டச்சி புதூர் ஊராட்சிக்கு உட்பட்ட மாருதி நகர் அருகே 68 ஏக்கரில் ஏற்படுத்தப்பட்டுள்ள பிரச்சாரக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு பேசுகிறார்.
இதில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் கே.பழனிசாமி மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் கலந்து கொள்கின்றனர். தாராபுரம் தொகுதியில் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் போட்டியிடுகிறார். அவர் உட்பட கோவை, திருப்பூர், நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களின் வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி பிரச்சாரம் செய்கிறார்.
பின்னர், மதியம் 2.20 மணிக்கு கோவை விமான நிலையத்துக்கு ஹெலிகாப்டர் மூலம் வரும் பிரதமர் மோடி, அங்கிருந்து புதுச்சேரி மாநிலத்துக்கு மாலை 4.25 மணிக்குச் செல்கிறார். அங்கு பிரச்சாரத்தை முடித்துக் கொண்டு 6.25 மணிக்கு சென்னைக்குச் செல்லும் பிரதமர் மோடி, அங்கிருந்து தனி விமானம் மூலம் டெல்லிக்குத் திரும்புகிறார்.
பிரதமர் பிரச்சாரத்தை முன்னிட்டு, தாராபுரத்தில் 4,000 போலீஸார் பாதுகாப்புப் பணிக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கோவை விமான நிலையத்திலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு இருந்தன.
போராட்டம் - கைது
ஐ.நா.சபையில் இலங்கை அரசுக்கு எதிராகக் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தில் இலங்கை அரசுக்கு ஆதரவாக இந்திய அரசு செயல்பட்டதற்காக, பிரதமர் மோடிக்குக் கண்டனம் தெரிவித்து, அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, தந்தை பெரியார் திராவிடர் கழகம் உள்ளிட்ட அமைப்புகளின் சார்பில், பீளமேட்டில் கருப்புக் கொடி காட்டும் போராட்டம் இன்று காலை நடத்தப்பட்டது. போலீஸார் தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட 60 பேரை பீளமேடு போலீஸார் கைது செய்தனர்.