

அரசியல் சாக்கடையின் துப்புரவுத் தொழிலாளர்கள் நாங்கள் என, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
வேளச்சேரி தொகுதி சந்தோஷ்பாபுவை ஆதரித்து இன்று (மார்ச் 30) கமல்ஹாசன் பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது அவர் பேசியதாவது:
"அரசியல் சாக்கடை இன்னும் அசிங்கமாகிக் கொண்டிருக்கிறதே தவிர அதனை யாரும் சரிசெய்யவே வரவில்லை. இதற்கு மேல் விட்டால் அடுத்த தலைமுறை நாசமாகிவிடும் என்பதால் தைரியமாக ஒரு கூட்டம் இறங்கி வந்திருக்கின்றனர். சந்தோஷ்பாபு, ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் படித்தவர். எதற்கு இந்த மக்களுக்காகப் பணி செய்ய வேண்டும் என நினைக்காமல் இறங்கி வந்திருக்கிறார்.
அரசியல் சாக்கடைதான் என்பதை ஒப்புக்கொண்டு, அந்த சாக்கடைக்குள் இறங்கி, உங்களுக்காக துப்புரவுப் பணி செய்யும் தொழிலாளி சந்தோஷ்பாபு, கமல்ஹாசன் எல்லாரும் இந்த அரசியல் சாக்கடையின் துப்புரவுத் தொழிலாளர்கள். எங்களுக்கு இதில் அசிங்கம் கிடையாது. இதனை நாங்கள் சுத்தம் செய்யாவிட்டால் நாளைய தலைமுறையினர் உங்களைத் திட்டுவார்கள். என்னைத் திட்டுவார்கள். அதற்காகத்தான் நான் வந்திருக்கிறேன்.
தமிழக மக்கள் என்னை 5 வயதிலிருந்து தோளில் தூக்கி வளர்த்திருக்கிறார்கள். இதனை நான் சந்தோஷத்துக்காகச் சொல்லவில்லை. இந்த தாடியெல்லாம் பார்க்காமல், இந்தக் கூட்டத்திலேயே என்னைக் குழந்தையாக பாவிப்பவர்கள் உள்ளனர். இந்த தாடிக்குள்ளும் ஒரு 'களத்தூர் கண்ணம்மா' குழந்தை அவர்களுக்குத் தெரியும். அந்த வயதில் இருந்து என்னைப் பார்த்த பெண்களும், என்னை 'அப்பா' என்று அழைக்கும் பெண்களும் நிறைய பேர் இருக்கின்றனர். சிறிய வயதினருக்கு நான் 'இந்தியன்' தாத்தா. எனவே, நான் பாப்பாவிலிருந்து தாத்தா வரைக்கும் இங்கு இருந்திருக்கிறேன்.
இவர்களுக்கு நான் பதிலுக்கு ஏதாவது செய்யாமல் போய்விட்டால் என் வாழ்க்கை முழுமையான வாழ்க்கை அல்ல. அதற்காகத்தான் நான் வந்திருக்கிறேன். இங்கு வந்திருக்கும் அனைவருக்கும் வேறு தொழில் இருக்கிறது. உங்கள் பணத்தில் கைவைத்துதான் பிழைக்க வேண்டும் என்பதில்லை. இரு அரசாங்கத்தில் இருப்பவர்களும் ஏழைகளின் வயிற்றில் அடித்து சுவிஸ் வங்கியில் பணம் வைத்திருக்கின்றனர். அதனை மாதிரி ஒரு அக்கிரமம், கிரிமினல் குற்றம் வேறு இருக்க முடியாது.
சட்டப்பேரவையில் 33% உறுப்பினர்கள் கிரிமினல் குற்றம் செய்தவர்கள் என ஊடகங்களே சொல்கின்றன. ஒரு வித்தியாசத்திற்கு இம்மாதிரி படித்தவர்களை எம்எல்ஏக்களாக அமர்த்துங்கள், பெருமையாக இருக்கும். எங்களுடன் இருப்பவர்கள் மக்களுடன் மக்களாக நிற்பதற்கு எப்போதும் சங்கடப்பட்டவர்கள் அல்ல. ஆனால், அவர்கள் தனி வாழ்க்கையில் உயர்ந்து நின்றவர்கள்".
இவ்வாறு கமல் பேசினார்.