

தென்தமிழக மக்கள் பிரதிநிதிகள் மதுரை விமானநிலையத்தை மேம்படுத்தி 24 மணி நேரம் இயங்குவதற்கு நடவடிக்கை எடுக்காததால் மதுரைக்கும் - சிங்கப்பூருக்கும் இயக்கப்பட்ட 2 விமானங்கள் சத்தமில்லாமல் ரத்து செய்யப்பட்டுள்ளதால் விமானப்பயணிகள் அதிர்ச்சியடைந்துள்ளன.
கடந்த 2017ஆம் செப்டம்பர் மாதம் முதல் மதுரை விமானம்நிலையம் வழியாக டெல்லியிலிருந்து சிங்கப்பூருக்கு வாரத்திற்கு 3 விமானங்கள் இயக்கப்பட்டு வந்தன.
இந்த விமானங்கள் டெல்லி, மதுரை, சிங்கபூர் ஆகிய மூன்று விமானநிலையங்களை இணைத்து செயல்பட்டு வந்ததால் தென் தமிழகம் மட்டுமில்லாது வடமாநில விமானநிலையப்பயணிகளும் பயனடைந்து வந்தனர்.
வாரத்தில் மூன்று நாட்கள் இந்த சிங்கப்பூர் விமானங்கள் மதுரை வழியாக இயக்கப்பட்டன. இந்த விமானங்கள் இயக்கப்படும்போதே, மதுரை விமானநிலையத்தில் சிஐஎஸ்எஃப் வீரர்கள் பற்றாக்குறை காணப்பட்டது. அவர்கள் இரவு 10 மணி வரை மட்டுமே பணியில் இருந்தார்கள். சிங்கபூர் இரவு நேர விமானம் இரவு 11.15 மணிக்கு மதுரையில் இருந்து சிங்கபூர் செல்ல வேண்டும்.
ஆனால், மதுரை விமானநிலையம் 24 மணி நேரம் செயல்படாமல் இரு ஷிப்ட் முறையில் இரவு 10 மணி வரையே செயல்பட்டது. சிங்கபூர் செல்லும் இரவு நேர விமானங்களை இயக்குவதற்காகவே சிஐஎஸ்எஃப் வீரர்களின் 2வது ‘சிப்ட்’டை இரவு 11.30 மணி வரை நீட்டித்தனர். அப்படி பெரும் சிரமப்பட்டு சிங்கபூர் விமானங்கள் மதுரை வழியாக இயக்கப்பட்டு வந்தன.
இந்நிலையில் கோடை கால விமானங்கள் இயக்கும்பட்டியல் வெளியிடப்பட்டது. அதில் சிங்கப்பூருக்கு இயக்கப்பட்ட வந்த 2 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. அதற்கு சிஐஎஸ்எஃப் வீரர்கள் பற்றாக்குறையே காரணம் என்று சொல்லப்படுகிறது.
சிங்கபூர் விமானங்களை ஏர் இண்டியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் இயக்கிவந்தது. இந்த நிறுவனம், கடந்த ஒருமாதத்திற்கு முன்பே, வழக்கம்போல் இந்த கோடை காலத்திலும் தங்களுடைய சிங்கப்பூர் விமானங்களை மதுரை வழியாக இயக்குவதற்கு அனுமதி கேட்டிருந்தனர்.
ஆனால், மதுரை விமான நிலையம் தரப்பில் 2வது ஷிப்ட் இரவு 10 மணியோடு முடிந்துவிடும், ‘ஷிப்ட்’டை நீட்டிக்க போதிய சிஐஎஸ்எஃப் வீரர்கள் இல்லாததால் 2வது ‘ஷிப்ட்’ 10 மணிக்கு மேல் நீட்டிக்க முடியாது என்று தெரிவித்து விட்டனர்.
அதனால், ஏர் இண்டியா எக்ஸ்பிரஸ் நிறுவனம், மதுரை வழியாக இயக்கி வந்த 2 விமானங்களை தற்போது ரத்து செய்துள்ளது. அதனால், வாரத்திற்கு 3 நாள் மதுரை வழியாக இயக்கப்பட்டு வந்த சிங்கப்பூர் விமானங்கள், தற்போது ஒரே ஒரு நாள் திங்கட்கிழமைதோறும் மட்டும் இயக்கப்படுகிறது.
தென் தமிழக மக்கள் பிரதிநிதிகள் தொடர்ந்து மதுரை விமானநிலையத்தை மேம்படுத்தவும், அதனை 24 மணி நேரமும் செயல்படும் விமானநிலையமாக மாற்றுவதற்கும் நடவடிக்கை எடுக்காததலேயே மதுரை விமானநிலையம் தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வருவதாக கூறப்படுகிறது.
இந்த தேர்தலிலும் பல்வேறு வாக்குறுதிகளை அள்ளி வீசும் தென் தமிழகத்தில் போட்டியிடும் அரசியல் கட்சி வேட்பாளர்கள் ஒருவர் கூட மதுரை விமானநிலையத்தை மேம்படுவத்துவதற்கான வாக்குறுதிகளை முன்வைக்கவில்லை.
அரசியல் கட்சிகளும், தங்கள் தேர்தல் அறிக்கையில் மதுரை விமானநிலையத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை.